Published : 10 Apr 2024 05:40 AM
Last Updated : 10 Apr 2024 05:40 AM
பொன்னேரி: மணலி அருகே தனியார் பெட்ரோலியம் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் மூலப்பொருட்கள் நிரப்பும் தொட்டியில் விஷவாயு தாக்கி ஒப்பந்த தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, மணலியை அடுத்த சாத்தாங்காடு காவல் நிலையம் அருகே தனியார் பெட்ரோலியம் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் உள்ள மூலப்பொருட்கள் நிரப்பும் தொட்டி, காலியாக இருக்கும் போது அதனை தொழிலாளர்கள் சுத்தம் செய்வது வழக்கம்.
அந்த வகையில், நேற்று மதியம் 3.30 மணியளவில் காலியாக இருந்த மூலப்பொருட்கள் நிரப்பும் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில், ஒப்பந்த ஊழியர்களான திருவொற்றியூர், ராஜசண்முகம் நகர் பகுதியை சேர்ந்த தீனதயாளன்(41), சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த பஜ்நாத் தாகூர்(51) ஆகிய இருவர் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் தொட்டியிலிருந்து வெளியேறிய விஷவாயு தாக்கியதால் மூச்சுத் திணறி மயக்கமடைந்து, தொட்டிக்குள் விழுந்தனர். இதையடுத்து, இருவரும் மாதவரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில் தீனதயாளன், பஜ்நாத் தாகூர் இருவரும் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து தகவலறிந்த சாத்தாங்காடு போலீஸார் சம்பவ இடம் விரைந்து, உயிரிழந்த தொழிலாளர்கள் இருவரின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT