

சென்னை: தேர்தல் நடத்தை விதிகளை மீறி அரசின் கொள்கை முடிவுகளை அறிவிப்புகளாக வெளி யிட்டு வருவதால் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, டி.ஆர்.பி.ராஜாவிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: முதல்வர் தனது சமூக வலைதளத்தில், கோவையில்கிரிக்கெட் மைதானம் கட்டித் தரப் படும் என்று அறிவித்துள்ளார். அரசின் கொள்கை முடிவை அறிவிப்பது, தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானதாகும்.
தற்போது முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி, தங்கம் தென்னரசு, டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறியுள்ளனர். அவர்களிடம் 48 மணி நேரத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களிடம் இன்பதுரை கூறும்போது, ‘‘முதல்வரே தேர்தல் விதிகளை மீறுகிறார். நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் உச்ச நீதிமன்றம்வரை செல்வோம். தேர்தலின் போது பிடிபடும் தொகை ஆட்சி யாளர்களால் தேர்தல் செலவுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாக தகவல் வந்துள்ளது. அதையும் கண்காணிக்க வேண்டும்’’ என்றார்.
அரசியல் பழிவாங்கும் செயல்: அதே போல், வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் ஆர்.எம்.பாபு முருகவேல் அளித்த புகார் மனுவில்,‘‘இந்த தேர்தலில்அதிமுக நிர்வாகிகள், தேர்தல் களப்பணி ஆற்றும் நிர்வாகிகளையும் சாதாரண குற்றவழக்குஉள்ளவர்களையும் மனஉளைச்ச லுக்கு உள்ளாக்கும் வகையில் உள்நோக்கத்தோடு அவர்களிடம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வற்புறுத்துகின்றனர். இதனை அரசியல் பழிவாங்கும் செயலாக கருதுகிறோம்.
டிஜிபிக்கு சுற்றறிக்கை: எனவே இந்த விஷயத்தில் டிஜிபிக்கு தேர்தல் ஆணையம் உடனடியாக ஒரு சுற்றறிக்கையை அனுப்பி இந்த செயலை நிறுத்தவேண்டும்’’ என தெரிவித்துள்ளார். அதேபோல், அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் இ.பாலமுருகன் தலைமை தேர்தல் அதிகாரியிடம் அளித்த கடிதத்தில், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களிடம் தபால் வாக்கு பெறும் நிகழ்வில், ஆளுங்கட்சி பிரமுகர்களை பயன்படுத்தியது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.