

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பாமக வேட்பாளர் திலகபாமா, வீதிகளில் பறையடித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
திண்டுக்கல் தொகுதி பாமக வேட்பாளர் ம.திலகபாமா, நகர வீதிகளில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, கோவிந்தாபுரம் பகுதியில் பறையடித்து இவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, அவர்களுடன் இணைந்து வேட்பாளரும் பறையடித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வேட்பாளரின் இச்செயல் அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்தது.
பாமக வேட்பாளர் திலக பாமா பிரச்சாரத்துக்கு செல்லும் இடங்களில் எல்லாம் இடத்துக்கு தகுந்தாற்போல் நாற்று நடுவது, வடை சுடுவது, கரும்பு சாறு பிழிவது, குதிரை வண்டியில் செல்வது, மாம்பழம் விற்பது என வித்தியாச மாகச் செயல்பட்டு மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அதனடிப்படையில், திண்டுக்கல் நகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட அவர், பறையடித்து நடனமாடி ஆதரவு திரட்டினார்.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் தனபாலன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள், பாமக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் உடன் சென்றனர்.