Published : 10 Apr 2024 04:10 AM
Last Updated : 10 Apr 2024 04:10 AM
ராணிப்பேட்டை: ‘அமைச்சர் துரைமுருகன் அண்ணா உங்கள் கனவில் கலைஞரே வந்து எனக்கு இந்த தேர்தலில் உதவி செய் என்று சொல்லுவார்’ என லாலாப்பேட்டையில் பிரச்சாரத்தின் போது பாமக வேட்பாளர் கே.பாலு நேற்று தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் கே.பாலு நேற்று காட்பாடி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதில், லாலாப் பேட்டை பகுதியில் வாகன பிரச்சாரத்தின் போது வேட்பாளர் கே.பாலு பேசும்போது, “அமைச்சர் துரைமுருகன் அண்ணா இந்த தொகுதி மக்களுக்கு ஏன் நீங்கள் எதுவும் செய்யவில்லை. உங்கள் கட்சியைச் சேர்ந்த அரக்கோணம் மக்களவை உறுப்பினரும், தற்போது மீண்டும் தேர்தல் களம் காணும் ஜெகத் ரட்சகனை, எந்த கேள்வியும் கேட்க முடியவில்லை.
நீங்கள் பொதுப்பணித் துறை அமைச்சாராகவும், கலைஞர் பக்கத்திலும், அண்ணாவின் அருகில் இருந்தவர். உதயநிதியை பார்க்கிறீர்கள். இன்ப நிதியையும் பார்க்க ஆசைப் படுகிறீர்கள். ஆனால், உங்களை வெற்றி பெற வைத்த மக்களுக்கு என்ன செய்தீர்கள். இந்த ஊர் பிரச்சினைகளை பற்றி பேசலாம். அன்பாக பேசுவோம், நான் அழைக்கிறேன் வாங்க அண்ணா. மேலும், மெரினாவில் அண்ணாவின் நினைவிடம் அருகே, கலைஞரின் உடலை அடக்கம் செய்ய உதவியவன் நான். இந்த நேரத்தில் உதவி செய்ய வேண்டும் என்றால், நீங்கள் எனக்கு தான் உதவ வேண்டும்.
மறைந்த கலைஞரே உங்கள் கனவில் வந்து, பாலுவுக்கு உதவி செய். ஜெகத்ரட்சகனால் எந்தப் பயனுமில்லை. அவரால் கட்சிக்கு அவப் பெயர் தான் என சொல்லுவார். மேலும், லாலாப் பேட்டையில் குடிநீர், சாலை வசதி, பேருந்து வசதி பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. இவைகளை எல்லாமல் தீர்க்காமல் எங்கு போனீர்கள். மக்களவை உறுப் பினராக எனக்கு 6 மாதங்கள் வாய்ப்பு தாருங்கள், சிப்காட் குரோமியம் கழிவுகளை காலி செய்து காட்டுவேன். மதுபானக் கடைகளையும் அகற்றுவேன். இந்த தொகுதி மக்களின் வாழ்க்கை வளம் பெறவும், அவர்களின் பிரச்சினைகளையும் தீர்ப்பேன்” என்றார். தொடர்ந்து, காட்பாடி சட்டப் பேரவை தொகுதிக்கு உட்பட பல்வேறு பகுதிகளில் அவர் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT