Published : 09 Apr 2024 04:33 PM
Last Updated : 09 Apr 2024 04:33 PM
சென்னை: நிதிமோசடியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பாஜக வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சிவகங்கை பாஜக வேட்பாளர் டி.தேவநாதன், அவர் நிறுவனத் தலைவர் மற்றும் இயக்குநராக உள்ள சென்னை மயிலாப்பூரில் இயங்கி வரும் 'தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிமிடெட்' நிறுவனம் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களின் ரூ.525 கோடி மோசடி செய்து விட்டதாக புகார் எழுந்துள்ளது.
முதலீட்டாளர்களுக்கு வட்டி வழங்கப்படுவதில்லை. முதலீடு செய்த தொகையை திரும்பக் கேட்டால் தரமுடியாது என்றும், மீறி போலிசில் புகார் செய்தால் உங்கள் பணத்திற்கு நாங்கள் பொறுப்பு இல்லை என அச்சுறுத்தியதாகவும் முதலீட்டாளர்கள் கூறுகிறார்கள். கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மட்டும் இந்த நிதி நிறுவனம் வழங்கிய 150க்கும் மேற்பட்ட காசோலைகள் வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் திரும்பி வந்துவிட்டதாக முதலீட்டாளர்கள் கூறுகிறார்கள்.
இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் 10 முதல் 11 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும் என்று அறிவித்து நடுத்தர வர்க்க மக்களிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளது இந்நிறுவனம். இதில் முதலீடு செய்தவர்கள் பெரும்பாலும் அரசு ஊழியர்கள் மற்றும் பணி ஓய்வு பெற்ற முதியோர் ஆவர்.
தங்கள் வாழ்நாள் பணத்தை முதலீடு செய்து மோசடிக்குள்ளாகி இருக்கும் இந்த முதலீட்டாளர்கள் அனைவரின் முதலீட்டுத் தொகையும் மீட்டெடுத்து வட்டியோடு அவர்களுக்குத் திரும்பி வழங்க தமிழ்நாடு அரசும், தமிழக காவல்துறையும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், ரூபாய் 500 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்டுள்ள டி.தேவநாதன் மீது பண மோசடி தடுப்புச் சட்டப்படி அமலாக்கத்துறையும் வருமான வரித்துறையும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதுடன், பெரும் நிதி மோசடி குற்றச்சாட்டுக்களை சுமந்தபடி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்திய தேர்தல் ஆணையத்தை கேட்டுக் கொள்கிறது.
நிதி மோசடி நிறுவனத்தின் தலைவர் மற்றும் இயக்குநராக உள்ள டி.தேவநாதன் அவர்கள் பாரதீய ஜனதா கட்சியின் சிவகங்கை வேட்பாளராக போட்டியிடுகிறார். இவருக்கு வாக்குக் கேட்டு பிரச்சாரத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியுடன் மேடையில் ஒன்றாக நின்று தன் பாதுகாப்பை உறுதி செய்து கொண்டுள்ளாரோ என்ற ஆழ்ந்த சந்தேகமும், முதலீட்டாளர்கள் மத்தியில் பரவியுள்ளது. இது குறித்து பிரதமர் மோடி தனது நிலையை தெளிவு படுத்த வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது'' என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT