

நாகர்கோவில்: கன்னியாகுமரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் கூட்டாலுமூட்டில் நேற்று பிரச்சாரத்தின் போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது, அவர் கூறியதாவது: ரூ. 4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தை அரசியல் பழிவாங்கும் செயலாக பயன்படுத்தி வருகின்றனர். அந்த பணத்துக்கும், தனக்கும் சம்பந்தமே இல்லை என வேட்பாளரே தெரிவித்துவிட்டார். பாஜக வேட்பாளர்களின் வீடுகள், நிறுவனங்களில் சோதனை செய்ய தேர்தல் ஆணையத்தை திமுக அணுகியிருக்கிறது. இந்த விவகாரத்தில் தயவு செய்து நான் உட்பட அனைத்து பாஜக வேட்பாளர்களின் வீடுகளில் சோதனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். கன்னியாகுமரி மாவட்ட தலைமை தபால் நிலைய வளாகத்தில் பாஸ்போர்ட் அலுவலகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இதுவரையிலும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இது கூட எம்.பி.யாக இருக்கும் விஜய் வசந்துக்கு தெரியாமல், பாஸ்போர்ட் அலுவலகம் குமரியில் கொண்டு வருவதாக அவர் கூறுவதன் அர்த்தம் புரியவில்லை. தேர்தல் பரப்புரை செய்ய அனைவருக்கும் சரி சமமான வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவர்கள் பல இடங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும்போது, பாஜக தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்தால் என்ன கெட்டுப்போகிறது? பாரதிய ஜனதா தலைவர்களுக்கு ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது? இவ்வாறு அவர் கூறினார்.