Published : 09 Apr 2024 06:30 AM
Last Updated : 09 Apr 2024 06:30 AM

தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணாத திமுக, அதிமுக மீது அரசு ஊழியர்கள் கோபம்: அண்ணாமலை விமர்சனம்

சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை:

‘தமிழகம் முழுவதும் போக்குவரத்து துறையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பல மாதங்களாக வழங்கப்படாமல் இருக்கும் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை போக்குவரத்துதொழிலாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

அவர்களது கோரிக்கைகளை பரிசீலிப்பதாக கடந்த 2014-ம் ஆண்டு, அப்போதைய அதிமுக அரசு உறுதி அளித்தது. ஆனால், இதில் கடந்த 10 ஆண்டுகளாக எந்தவித முன்னேற்றமும் இல்லை. கடந்த ஆட்சியிலும், இந்த ஆட்சியிலும், அவர்களது குறை தீர்க்கப்படவில்லை.

தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 2017-ல் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நீண்ட நெடிய அறிக்கை வெளியிட்டார். எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்பதற்காக, 2021 சட்டப்பேரவை தேர்தலின்போது, போலி வாக்குறுதிகள் கொடுத்து, ஆட்சிக்கு வந்த பிறகு, அவர்களைப் பற்றி எந்தவித சிந்தனையும் இல்லாமல் முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார்.

அதேபோல, கல்வியாளர்கள், இடைநிலை ஆசிரியர்கள், மாற்றுத்திறன் பட்டதாரிகள் என பல தரப்பினரும் நீண்டகாலமாகவே தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திக்கொண்டுதான் இருக்கின்றனர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக, அதிமுக, திமுக ஆகிய 2 கட்சிகளின் ஆட்சியில், தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்காமல், தற்போது தேர்தல் நேரத்தில் அவர்களுக்காக குரல் கொடுப்பதுபோல நாடகமாடும் அதிமுக மீதும், கடந்த35 மாதங்களாக ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போடாமல், தற்போதும் தொழிலாளர்களுக்கு தீர்வுவழங்காமல் அவர்களை அச்சுறுத்த நினைக்கும் திமுக மீதும், போக்குவரத்து ஊழியர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாற்றுத் திறன் பட்டதாரிகள் என அனைத்து தரப்பினரும் கடும் கோபத்தில் இருக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x