

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப் பாளையத்தில் நடக்கும் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி நாளை கோவை வருகிறார். இதையொட்டி டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 4 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் அண்ணாமலை ( கோவை ), மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ( நீலகிரி ), வசந்தராஜன் ( பொள்ளாச்சி ), ஏ.பி.முருகானந்தம் ( திருப்பூர் ) ஆகியோரை ஆதரித்து மேட்டுப்பாளையத்தில் நாளை ( மார்ச் 10 ) நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். கோவை விமான நிலையத்திலிருந்து மதியம் 2.20 மணிக்கு ஹெலிகாப்டர் மூலமாக மோடி புறப்பட்டு, பொதுக் கூட்டம் நடக்கும் இடத்துக்கு அருகே ஜடையம்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்துக்கு வருகிறார்.
பின்னர், அங்கிருந்து பிரச்சாரம் நடக்கும் மேடைக்கு கார் மூலம் வருகிறார். பிரச்சாரம் முடிந்தவுடன் 3.30 மணிக்கு ஜடையம் பாளையத்திலிருந்து ஹெலிகாப்டரில் கோவை விமான நிலையம் வந்து, நாக்பூர் புறப்படுகிறார். பிரதமரின் பிரச்சாரத்துக்காக, அன்னூர் செல்லும் வழியில் காரமடை நால்ரோடு பிரிவு அருகே மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. ஹெலிபேடு அமைக்கும் பணியும் நடைபெற்றுவருகிறது. அங்கு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் வருகையையொட்டி டிரோன் பறக்க காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.
இது குறித்து மாவட்ட காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில்,‘‘பிரதமரின் கோவை வருகையையொட்டி, பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு, பொதுக் கூட்டம் நடைபெறும் இடத்திலிருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு 9, 10-ம் தேதிகளில் தற்காலிக சிவப்பு மண்டலமாக அறிவிக்கப் பட்டுள்ளது. எனவே, பொதுக் கூட்டம் நடக்கும் இடம், அதை சுற்றிய 5 கிலோ மீட்டர் தொலைவுக்கும், பிரதமர் வரவிருக்கும் வழித் தடத்திலும் இரு நாட்களும் டிரோன்கள், ஆளில்லாத வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது’’ எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், பிரதமரின் வருகையையொட்டி, காவல்துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 4 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடு கின்றனர்.