

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் தீர்க்கப்படாத கோரிக்கைகளை முன்வைத்து கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை அறிவித்துத் தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
மலைகள் மற்றும் வனங்கள் சூழ்ந்த கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் அதிக அளவில் மலைக் கிராமங்களை உள்ளடக்கியுள்ளது. குறிப்பாக இத்தொகுதிக்கு உட்பட்ட பர்கூர், வேப்பனப்பள்ளி, தளி, தேன்கனிக்கோட்டை ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிக அளவில் மலைக் கிராமங்கள் மற்றும் வனக் கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் இன்று வரை சாலை, குடிநீர், போக்குவரத்து, கல்வி, மருத்துவமனை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேள்விக் குறியாக உள்ளது.
இதற்காக தொடர் போராட்டங்கள் நடத்தியும் தீர்வு கிடைக்காமல் உள்ளது. இதனால், அதிருப்தி அடையும் கிராம மக்கள் தேர்தலுக்கு, தேர்தல் தங்களின் உள்ளூர் கோரிக்கைகளை முன்வைத்துத் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டத்தை கையில் எடுத்து, அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகளின் கவனத்தை ஈர்த்து வருவது வாடிக்கையாகி வருகிறது. தற்போது, மக்களவைத் தேர்தலையொட்டி, பல கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இதில், பட்டா வகை மாற்றம் கோரி, கெலவரப்பள்ளி புனுகன்கொட்டாயில் நரிக்குறவர் மக்கள், சாலை வசதி கோரி பழையூர் கிராம மக்கள், மயான பிரச்சினையைத் தீர்க்கக் கோரி ஜெகதேவியில் இருளர் இன மக்கள், பட்டா வழங்கக் கோரி காட்டிநாயனப்பள்ளி சமத்துவபுரம் மக்கள், கிருஷ்ணகிரி அணைக்கு நிலம் கொடுத்த சோக்காடி ஊராட்சிக்கு உட்பட்ட மக்களுக்கு மாற்றாக அப்பகுதி மலையில் நிலம் வழங்கப்பட்டது. ஆனால், 70 ஆண்டாக மாற்று இடத்துக்குப் பட்டா வழங்க வில்லை இக்கோரிக்கையை முன்வைத்து 10 கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கிராம மக்கள் சிலர் கூறியதாவது: தேர்தலில் எங்களின் ஜனநாயக கடமையை அளிக்க வேண்டும் என்ற உணர்வு எங்களுக்கு இருந்தாலும், எங்களின் அடிப்படை கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காததால், எங்கள் வலியை அழுத்தமாகச் சொல்ல எங்களுக்கு வேறு வழியில்லாததால், தேர்தல் புறக்கணிப்பு என்ற மனநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். அரசியல் வாதிகள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு எங்கள் கோரிக்கை சென்றாலும், பிரச்சினைகள் தீர்வு காண்பதில் ஏற்படும் காலதாமதம், அலட்சியமே இதுபோன்ற போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலை உருவாகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது தொடர்பாக வருவாய்த் துறை அலுவலர்கள் கூறியதாவது: தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடும் மக்களிடம் அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, அதன் தற்போதைய நிலையை விளக்கிக் கூறி வருகிறோம். மேலும், தேர்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெற்ற பின்னர் விரைந்து நடவடிக்கை எடுக்க உறுதியளிக்கிறோம். இதில் சமாதானம் அடைந்து, தேர்தல் புறக்கணிப்பைத் திரும்ப பெற்றுக் கொண்டனர். பொதுவாக பல்வேறு பிரச்சினைகளில் தீர்வு காண்பதில் தனி நபர் ஆட்சேபனை, நீதிமன்ற வழக்கு நிலுவை மற்றும் நிர்வாக ரீதியான காரணங்களால் காலதாமதம் ஏற்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.