Published : 09 Apr 2024 06:05 AM
Last Updated : 09 Apr 2024 06:05 AM
சென்னை: தண்டையார்பேட்டை அதிமுக பெண் நிர்வாகி வீட்டில் இருந்து ரூ.13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப் பதிவுவரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
அரசியல் கட்சியினர் பணம் மற்றும் பரிசு பொருட்களை கொடுத்து, வாக்குகளை கவர்ந்து விடக்கூடாது என்பதில் தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது. பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 700க்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனை முடுக்கி விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், காசிமேட்டில் உள்ள வீடு ஒன்றில் தேர்தலுக்கு பணம் கொடுப்பதற்காக, பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையக் கட்டுப்பாட்டு அறைக்குதகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஆர்.கே.நகர் பறக்கும்படை அதிகாரி செல்வ விநாயகம்,காவல் உதவி ஆய்வாளர் கணேசன் தலைமையிலான பறக்கும்படையினர் சென்னை தண்டையார்பேட்டை, புதிய அமராஞ்சிபுரத்தில் உள்ள வீடு ஒன்றில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது கட்டுக்கட்டாக ரூ.13 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது. அதுகுறித்து வீட்டில் இருந்த உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பொற்கொடி (25), அவரது தாயார் தங்கம் (65), ஆகியோரிடம் விசாரிக்கப்பட்டது. அப்போது, பொற்கொடி, மீன்பிடிக்க கடலுக்கு செல்பவர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வருகிறேன்.
தற்போது மீன் பிடிக்க அதிகமான படகு போகாததால் ரூ.13 லட்சம் பணம் யாருக்கும் கொடுக்காமல் வைத்திருந்ததாக கூறியதாக போலீஸார் தெரிவித்தனர். பணத்துக்கான ஆவணம் இல்லாததால் அனைத்து பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
பொற்கொடியின் தாயார் தங்கம் என்பவர் தண்டையார்பேட்டையில் உள்ள அமராஞ்சிபுரம் பகுதி அதிமுக பொறுப்பாளராக உள்ளார் என பறக்கும் படை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT