தேர்தல் பணியில் குறைந்த அளவு வங்கி ஊழியர்களை ஈடுபடுத்த வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு வங்கி ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: தேர்தல் பணியில் குறைந்த அளவு வங்கி ஊழியர்களை ஈடுபடுத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்தை வங்கி ஊழியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: தேர்தல் பணியில் வங்கி அதிகாரிகள், ஊழியர்களை ஈடுபடுத்துவது அதிகரித்து வருகிறது. வங்கிகளில் ஊழியர் பற்றாக்குறையால், ஊழியர்களுக்கு வேலைப் பளு அதிகரித்துள்ளது. தினசரி வழக்கமான வேலைகளை கூட அவர்களால் சரியான நேரத்துக்கு முடிக்க முடியவில்லை.

மேலும், தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், பல ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் அடுத்த 2 மாதங்கள் விடுப்பு எடுத்து சுற்றுலா செல்வார்கள். இதனால், வங்கிகளில் ஊழியர்கள் எண்ணிக்கை குறைவதால் பணிகள் பாதிக்கும்.

ஏற்கெனவே, தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள், பொதுத் துறை நிறுவன ஊழியர்களை குறைந்த அளவு ஈடுபடுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு மாறாக அதிகளவு அரசு ஊழியர்கள், குறிப்பாக, வங்கி ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

எனவே, தேர்தல் பணியில் குறைந்த அளவு வங்கி ஊழியர்களை பணியில் ஈடுபடுத்துமாறு மாநில தேர்தல் ஆணையர்களுக்கு, இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in