Published : 09 Apr 2024 07:22 AM
Last Updated : 09 Apr 2024 07:22 AM

தென் சென்னையில் தலைவர்கள் வருகையால் களைகட்டியது பிரச்சாரம்

சென்னை: தென் சென்னையில் கனிமொழி, டி.ராஜா, வானதி சீனிவாசன் ஆகியோர் தங்களுடைய வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதிமுகவினர் வீடு வீடாக ஆதரவு திரட்டி வருகின்றனர்.

தென்சென்னை மக்களவை தொகுதியில் விருகம்பாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை, மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் என 6 சட்டப்பேரவை தொகுதிகள் அடங்கியுள்ளன. நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ள இந்த தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், அதிமுக வேட்பாளர் ஜெ.ஜெயவர்தன், பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சு.தமிழ்ச்செல்வி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தமிழச்சி தங்கபாண்டியன் (திமுக) - காலில் பிரச்சினை இருந்தாலும் ஊன்றுகோளுடன் தினந்தோறும் காலையும், மாலையும் தென் சென்னை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டு மக்களை சந்தித்து வருகிறார் தமிழச்சி தங்கபாண்டியன். இவரை ஆதரித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், மநீம தலைவர் கமல்ஹாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி உள்ளிட்டோரும் வாக்கு சேகரித்துள்ளனர்.

தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை
ஆதரித்துசைதாப்பேட்டையில் நேற்று பிரச்சாரம் செய்த இந்திய கம்யூனிஸ்ட்
பொதுச்செயலாளர் டி.ராஜா, கனிமொழி எம்பி.

நேற்று மாலை, சைதாப்பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா பேசுகையில், “பாஜக ஆட்சியில் இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயகம் தகர்க்கப்படுகிறது. நம்முடைய வாழ்க்கையில், வரலாற்றில் இந்த தேர்தல் முக்கியமானது. பாஜகவிடம் இருந்து இந்தியாவை காப்பாற்ற வேண்டும். இந்தியாவை மீட்க வேண்டும்'' என்றார்.

தமிழிசை சவுந்தரராஜன் (பாஜக) - ``மக்களவை தேர்தல் என்பது மிகவும் முக்கியமானது. எத்தனை வேட்பாளர்கள் களத்தில் நின்றாலும் எங்களுக்கு இருக்கும் தனித்தகுதி என்ன வென்றால், பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்லி நாங்கள் தேர்தலை சந்திக்கிறோம்'’ என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

திருவான்மியூரில் பாஜக வேட்பாளர் தமிழிசை நேற்று பிரச்சாரம் செய்தார்.
அவருக்கு ஆதரவாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி,
முன்னாள் எம்எல்ஏ விஜயதாரணி வாக்கு சேகரித்தனர். படம்: எஸ். சத்தியசீலன்

இவருக்கு ஆதரவாக பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு, தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், நடிகை நமிதா உள்ளிட்டோரும் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

நேற்று இரவு திருவான்மியூர் பகுதியில் தமிழிசை சவுந்தரராஜனுக்காக ஆதரவு தெரிவித்து பாஜக மகளிர் அணி தேசிய தலைவி வானதி சீனிவாசன் எம்எல்ஏ தீவிர பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். தமிழிசைக்கு ஆதரவு தெரிவித்து வாக்கு சேகரிக்க பிரதமர் நரேந்திர மோடி இன்று வருகை தருகிறார்.

ஜெயவர்தன் (அதிமுக) - ‘`தென்சென்னை தொகுதிக்குட்பட்ட சோழிங்கநல்லூர் பகுதியில் பன்னாட்டு தகவல் தொழில் நுட்பம் கொண்டு வந்தது அதிமுகதான் என்றும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்ததனால் இளைஞர்களின் வாக்கு இரட்டை இலைக்குதான் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்'’ ஜெயவர்தன்.

தென் சென்னை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஜெ .ஜெயவர்தன்
கோடம்பாக்கம் பகுதியில் வாக்கு சேகரித்தார்.

தற்போதைய எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் தொகுதி பக்கமே வருவதில்லை என்றும், மக்களால் துரத்தி அடிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகளை முன் அடுக்குகிறார். இவருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், நடிகை கவுதமி உள்ளிட்டோர் வாக்கு சேகரித்தனர்.

சு.தமிழ்ச்செல்வி (நாதக) - திமுக, அதிமுக, பாஜக போட்டிக்கு இடையில், தொடர்ந்து தெருமுனை கூட்டங்கள், இரு சக்கர வாகன பிரச்சாரம், ஆட்டோக்களின் மூலம் தேர்தல் வாக்குறுதிகளை தெரியப்படுத்துதல், வீதிவீதியாக சென்று பிரசுரங்களை வழங்குதல், ஒலிவாங்கி சின்ன பாதாகைகளுடன் வலம் வருதல் போன்றவற்றை முன்னெடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார் நாம் தமிழர் வேட்பாளர் தமிழ்ச்செல்வி.

தென் சென்னை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில்
போட்டியிடும் சு தமிழ்ச்செல்வி கோடம்பாக்கம்
பகுதியில் வாக்கு சேகரித்தார்.

இவருக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 3-ம் தேதி தென் சென்னை முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இன்று பிரதமர் நரேந்திர மோடி வரவுள்ள நிலையில், அடுத்த சில தினங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வரவுள்ளதால் தென்சென்னை தொகுதியின் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x