Published : 09 Apr 2024 04:16 AM
Last Updated : 09 Apr 2024 04:16 AM
வேலூர்: வேலூருக்கு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் மோடி நாளை வருகைத் தர உள்ளதால் கனரக வாகனங்கள் போக்கு வரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், வேலூர் மாநகராட்சியில் இன்றும், நாளையும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மக்களவை தொகுதி யில் போட்டியிடும் பாஜக வேட் பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக பிரதமர் மோடி நாளை பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக, வேலூர் கோட்டை மைதானத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து நாளை காலை 9.20 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்படும் பிரதமர் மோடி, காலை 10.20 மணிக்கு வேலூர் விமான நிலையத்துக்கு வந்தடைகிறார்.
அங்கிருந்து கார் மூலம் பொதுக்கூட்ட மேடைக்கு வரும் மோடி காலை 10.30 மணியில் இருந்து 11.20 மணிவரை பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். பின்னர், காலை 11.30 மணியளவில் வேலூர் விமான நிலையத்தில் ஹெலிகாப்டரில் புறப்படும் பிரதமர், பகல் 12.05 மணிக்கு அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்துக்குச் செல்ல உள்ளார். அங்கிருந்து சிறப்பு விமானத்தில் பகல் 12.10 மணிக்கு புறப்படும் பிரதமர் பகல் 1.10 மணிக்கு கோவை விமான நிலையம் செல்ல உள்ளார்.
போக்குவரத்து மாற்றம்: வேலூருக்கு பிரதமர் வருகை யையொட்டி வாகன நெரிசல்களை தவிர்க்க கனரக வாகனங்கள் போக்குவரத்தில் நாளை (10-ம் தேதி) காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, குடியாத்தத்தில் இருந்து காட்பாடி வழியாக சென்னை செல்லும் வாகனங்கள் குடியாத்தம், வடுகன்தாங்கல், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம், ஈ.பி. கூட்டுச் சாலை, ராணிப்பேட்டை வழியாக சென்னை செல்ல வேண்டும்.
திருவண்ணாமலையில் இருந்து வேலூர் வழியாக சித்தூர் செல்லும் கனரக வாகனங்கள் திருவண்ணாமலை, சாத்துமதுரை, பென்னாத்தூர், ஸ்ரீபுரம், கந்தனேரி, தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்ல வேண்டும். சித்தூரில் இருந்து வேலூர் வழியாக திருவண்ணாமலை செல்ல வேண்டிய கனரக வாக னங்கள் சித்தூர், நரஹரிபேட்டை, ஈ.பி.கூட்டுச்சாலை, திருவலம், ராணிப்பேட்டை, ஆற்காடு, திமிரி, ஆரணி வழியாகவும் சென்னை செல்ல வேண்டிய வாகனங்கள் திருவலம், ராணிப்பேட்டை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னை செல்லலாம்.
சித்தூரில் இருந்து வேலூர் வழியாக பெங்களூரு செல்ல வேண்டிய வாகனங்கள் சித்தூர், கிறிஸ்டியான்பேட்டை, காட்பாடி-குடியாத்தம் சாலை வழியாக, குடியாத்தம், வி.கோட்டா சாலை வழியாக பெங்களூரு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட் டுள்ளது.
ட்ரோன்கள் பறக்க தடை: வேலூருக்கு பிரதமர் மோடி வருகையையொட்டி வேலூர் மாநகராட்சியில் இன்றும் (9-ம் தேதி), நாளையும் (10-ம் தேதி) இரண்டு நாட்களுக்கு ட்ரோன்கள், ராட்சத பலூன்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக் கப்பட்டுள்ளது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி வண்ணன் எச்சரித்துள்ளார். வாகன நெரிசல்களை தவிர்க்க கனரக வாகனங்கள் போக்குவரத்தில் நாளை (10-ம் தேதி) காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT