“திருப்பூரில் குறுந்தொழில் நிறுவனங்களை அழித்தொழித்தது பாஜக” - பிரகாஷ் காரத் காட்டம்

திருப்பூரில் நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பிரகாஷ் காரத் உரையாற்றினார்.
திருப்பூரில் நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பிரகாஷ் காரத் உரையாற்றினார்.
Updated on
2 min read

திருப்பூர்: மாநில அரசின் உரிமைகளை மீட்க, மத்தியில் பாஜக அரசு வெளியேற்றப்பட வேண்டும் என திருப்பூரில் பிரகாஷ் காரத் பேசினார்.

திருப்பூர் வெள்ளியங்காடு நால்ரோட்டில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சுப்பராயன் எம்.பி.யை ஆதரித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் இன்று பேசும்போது, “கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு, பெருமுதலாளிகளுக்கு உதவுகிற அரசாகத்தான் உள்ளது. விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள், இளைஞர்கள், பெண்கள், தலித் மற்றும் பழக்குடியினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் கடந்த 45 ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது.

சர்வதேச தொழிலாளர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 83 சதவீதம் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தவிக்கிறார்கள். 63 சதவீதம் பேர் மேல்நிலைக் கல்வி மற்றும் கல்லூரி கல்வியை கடந்த 10 ஆண்டுகளில் தாண்ட முடியவில்லை. இதுதான் மோடியின் சாதனை.

வேலைவாய்ப்பின்மை என்பது பாஜக அரசாங்கத்தின் நேரடி கொள்கையாக இருந்து வருகிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிக வேலைவாய்ப்பை உருவாக்கும். ஆனால் மத்திய அரசின் தவறான கொள்கையால் கோவை, திருப்பூர் பகுதியில் இவை அழித்தொழிக்கப்பட்டுள்ளன.

தேவைக்கேற்ப கடன், கச்சாப் பொருட்கள் கிடைக்கவில்லை. ஜிஎஸ்டி திட்டம் அமல்படுத்தபட்ட பிறகு தொழில் நசிவடைந்துள்ளது. இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், திமுக மற்றும் மார்க்சிஸ்ட் என யாருடைய தேர்தல் அறிக்கையாக இருந்தாலும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மேம்படுத்த தேர்தல் வாக்குறுதி தரப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மையை குறைக்க முடியும்.

இண்டியா கூட்டணி ஊழல் கூட்டணி என்கிறார் நாடுதோறும் மோடி. ஆனால் தேர்தல் பத்திரங்கள் மூலம், மிகப் பெரிய ஊழலில் பாஜக ஈடுபட்டுள்ளது. வருமான வரித் துறையும், அமலாக்கத் துறையும் கையில் வைத்துள்ளது பாஜக. ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக செயல்படுகிறது பாஜக.

இந்தியா என்பது மாநிலங்களின் ஒருங்கிணைந்த பகுதி ஆகும். ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு மொழி, கலாச்சாரம், பண்பாடு மற்றும் கலாச்சாரம் உள்ளது. ஆனால் மோடி அரசாங்கம் இந்தியை திணிக்கிறது. கல்வித் திட்டத்தை மாற்றுகிறது. நீட்டை வைத்து நெருக்குகிறது. ஆளுநரை வைத்து மாநில உரிமைகளையும், அதிகாரத்தையும் பறிக்கிறது. மத்திய அரசின் கைக்கூலிகளாக ஆளுநர்கள் இருக்கிறார்கள். கேரளாவிலும் இதே பிரச்சினை தொடர்கிறது.

புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளில் மத்திய அரசு தமிழக அரசுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. நிவாரணம் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. மாநில அரசின் உரிமைகளை மீட்க மத்திய பாஜக அரசை வெளியேற்ற வேண்டும். கடந்த மக்களவைத் தேர்தலைபோல் தமிழகத்தில் பாஜக ஒரு தொகுதியில் கூட ஜெயிக்கக் கூடாது. அவர்களுடன் கூட்டணியில் சிலர் வெளிப்படையாகவும், மறைமுகமாக அதிமுக போன்ற கட்சிகள் கூட்டணியில் உள்ளன.

கடந்த காலங்களில் பாஜக கொண்டுவந்த தவறான திட்டங்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டியவர்கள்தான் அதிமுகவினர். அவர்களையும் நாம் தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும்”, என்று அவர் பேசினார். இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணன், காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் ஆர்.கிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in