அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஏ.கே.எஸ்.அன்பழகன் காலமானார்

 ஏ.கே.எஸ்.அன்பழகன் | கோப்பு படம்
 ஏ.கே.எஸ்.அன்பழகன் | கோப்பு படம்
Updated on
1 min read

திருவண்ணாமலை: பெரணமல்லூர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஏ.கே.எஸ்.அன்பழகன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 54.

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் சட்டப்பேரவைத் தொகுதி (2001-2006) உறுப்பினராக இருந்தவர், அதிமுகவைச் சேர்ந்த ஏ.கே.எஸ் அன்பழகன். பெரணமல்லூர் ஒன்றிய அதிமுக செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். தற்போது, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளராக இருந்தார். ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கஜேந்திரனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், அவருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. நெஞ்சுவலி அதிகரித்ததால், வந்தவாசியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குடும்பத்தினர் அழைத்துச் சென்றுள்ளனர். அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. அவரது உடலுக்கு அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து சொந்த ஊரான பெரணமல்லூரில் இன்று மாலை இறுதிச் சடங்கு நடைபெற உள்ளன.

முன்னாள் எம்எல்ஏ ஏ.கே.எஸ் அன்பழகனின் தந்தை ஏ.கே சீனிவாசனும், பெரணமல்லூர் சட்டப்பேரவைத் தொகுதி (1991-1996) உறுப்பினராக இருந்துள்ளார். அதிமுகவின் தீவிர விசுவாசியான ஏ.கே.சீனிவாசன், உதவி காவல் ஆய்வாளர் பணியை ராஜிநாமா செய்துவிட்டு, அதிமுகவில் இணைந்தவர். ஏ.கே.எஸ் அன்பழகனின் தாயார் கோகிலம், பெரணமல்லூர் ஒன்றியக் குழுத் தலைவராக இருந்துள்ளார். இவருக்கு பவானி என்ற மனைவியும், மகுடேஸ்வரன், வீரேந்திரன் ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

பழனிசாமி இரங்கல்: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ''அனைத்துலக எம்ஜிஅர் மன்ற இணைச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஏகேஎஸ் அன்பழகன், மாரடைப்பால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

அதிமுக மீதும், அதிமுக தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த அன்புச் சகோதரர் அன்பழகனை இழந்து வாடும் அவரது மனைவியும், வந்தவாசி தொகுதி பொதுக்குழு உறுப்பினருமான பவானிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in