

கரூர்: கோயில் நிலம் எனக்கூறி காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருவதைக் கண்டித்து வெண்ணெய்மலை இனாம் நில குடி இருப்பவர்கள் நல சங்கம் சார்பில் வீடு, கடைளில் கருப்புக் கொடி ஏற்றி தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்து கருப்புக்கொடி ஏந்தி, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கரூர் வெண்ணெய்மலை பகுதி இனாம் நில குடி இருப்பவர்கள் நல சங்கம் சார்பில், இனாம் நிலங்களிலே பட்டா வழங்கியதை ரத்து செய்து, இனாம் நிலங்களை கோயில் நிலங்கள் என சித்தரிக்கும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை எச்சரித்தும் வீட்டு மனை உரிமையாள ர்கள் உரிமையை நிலை நாட்ட மக்களவைத் தேர்தல் புறக்கணிக்க முடிவு செய்தனர்.
அதன்படி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டும், மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து இன்று (ஏப். 8ம் தேதி) வெண்ணெய்மலை பகுதியில் வீடுகள் மற்றும் கடைகளில் கருப்புக்கொடி ஏற்றி, தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்துள்ளனர். மேலும் நல சங்கம் சார்பில் கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனையொட்டி இப்பகுதியில் வீடுகள், கடைகள் முன்பு கருப்புக் கொடி ஏற்றி, தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்துள்ளனர்.
இதுகுறித்து இனாம் நில குடியிருப்பவரகள் செய்தியாளர்களிடம் கூறியது, “இப்பகுதியில் பட்டா பெற்று குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் அவற்றை கோயில் நிலம் எனக்கூறி இந்து சமய அறநிலையத்துறை காலி செய்யக்கூறி நோட்டீஸ் அனுப்பி வருகிறது. சிறிது கூட அவகாசம் வழங்காமல் காலி செய்யக்கூறுவதை கண்டித்து இதில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேர்தலை புறக்கணித்து கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்” என்றார்.