‘வேட்பாளர் காங்கிரஸ் தான். ஆனா...’ - மயிலாடுதுறை தொகுதி ‘சம்பவம்’

‘வேட்பாளர் காங்கிரஸ் தான். ஆனா...’ - மயிலாடுதுறை தொகுதி ‘சம்பவம்’
Updated on
1 min read

மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.சுதா தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிவ.வீ.மெய்யநாதன், திமுக எம்.பி. செ.ராமலிங்கம், கல்யாணசுந்தரம், அரசு கொறடா கோவி.செழியன், மயிலாடுதுறை காங்கிரஸ் எம்எல்ஏ ராஜகுமார் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

ஆனால், கும்பகோணம் பகுதியில் வேட்பாளர் சுதா பிரச்சாரத்துக்கு வரும்போது தங்களை அழைப்பதில்லை என்றும், நிர்வாகிகள் கூட்டம், பொதுக்கூட்டம் போன்றவற்றுக்கான நோட்டீஸில் தங்களது பெயர்களை போடுவதில்லை என்றும் உள்ளூர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர். தங்கள் கட்சி வேட்பாளர் போட்டியிடும் நிலையில், தங்களுக்கு அழைப்பு விடுக்காததால் அதிருப்தியடைந்துள்ள அவர்கள், வேட்பாளரை ஆதரித்து தனியாக பிரச்சாரம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து கும்பகோணத்தைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கூறியது: வேட்பாளர் அறிவிப்புக்குப் பின் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் எங்களுக்கு அழைப்பு விடுக்கப்படாதது குறித்து கூட்டணி கட்சி நிர்வாகிகளிடம் கேட்டபோது, யாரையும் தனித்தனியாக அழைக்க முடியாது, நீங்களாகவே வர வேண்டும் என்று கூறிவிட்டனர்.

இதேபோல, கடந்த 2-ம் தேதி கும்பகோணத்தில் நடைபெற்ற திருச்சி சிவா எம்.பி பங்கேற்ற பொதுக்கூட்டத்துக்கான நோட்டீஸில் காங்கிரஸ் கட்சியின் மேயர் சரவணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பெயர்கள் இடம்பெறவில்லை. இதுகுறித்து கூட்டணியில் உள்ளவர்களிடம் கேட்டபோது, காங்கிரஸ் கட்சி தலைமை நிர்வாகிகள் எழுதிக் கொடுத்த பெயர்களைத்தான் நோட்டீஸில் போட்டுள்ளோம் என்றனர்.

இதனால், நாங்கள் பொதுக்கூட்டத்தில் கூட்டத்தோடு கூட்டமாக நின்றோம். வேட்பாளருடன் நாங்கள் பிரச்சாரத்துக்கு செல்லாததால், பலரும் எங்களிடம் கேள்வி கேட்கிறார்கள். இதனால், நாங்கள் எங்களது ஆதரவாளர்களுடன் வீடு வீடாகச் சென்று காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளோம். அவரது வெற்றிக்காக அயராது பாடுபடுவோம் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in