

எலும்பு முறிவு பிரச்சினையால் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட முடியவில்லை என்றும், பிரச்சாரத்தில் ஈடுபடுவதில் இருந்து ஓய்வு அளிக்குமாறும் கோரி பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு, தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: டெல்லியில் கடந்த 2019-ம் ஆண்டு ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் எனக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக இந்த பிரச்சினையுடன் இருந்து வருகிறேன்.
தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தாலும் கூட இன்னும் எனக்கு குணமாகவில்லை. இந்நிலையில் மருத்துவர்கள் எனது உடல் நிலையை மனதில் கொண்டு, பிரச்சாரத்தில் ஈடுபடவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.
பிரச்சாரத்தில் ஈடுபட்டால், அது மேலும் எனது உடல் நிலையை மோசமடைய செய்யும் என எச்சரித்துள்ளனர். பாஜகவின் அர்ப்பணிப்புள்ள தொண்டன் என்ற முறையில், எனது மருத்துவரின் அறிவுரைக்கு எதிராக வலி மற்றும் வேதனை இருந்த போதிலும் என்னால், முடிந்தவரை உழைத்து பிரச்சாரம் செய்தேன்.
ஆனாலும், எலும்பு முறிவு பிரச்சினையால் என்னால் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர முடியாத நிலையும், நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. எனவே, எனது உடல் நிலையை கருத்தில் கொண்டு என்னால் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்காக என்னை மன்னிக்கவேண்டும்.
பிரச்சாரத்தில் ஈடுபடமுடியாதது மிகவும் மனவருத்தத்தை அளிக்கிறது. தற்போது உள்ள பிரச்சினை உயிருக்கு ஆபத்தான நிலை இல்லை என்றாலும், மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தியதால் என்னால் பிரச்சாரத்தில் ஈடுபட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் நான் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவுள்ளேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.