Published : 08 Apr 2024 04:00 AM
Last Updated : 08 Apr 2024 04:00 AM

“திமுக, பாஜக ஆட்சியால் தமிழகத்துக்கு எந்த பயனும் இல்லை”- கோவை அதிமுக வேட்பாளர்

கோவை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் கவுண்டம்பாளையம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

கோவை: திமுக, பாஜக ஆட்சியால் தமிழகத்திற்கு எந்த பயனும் இல்லை என, கோவை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ஜி. ராமச்சந்திரன் தெரிவித்தார்.

கோவை கவுண்டம்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பெரிய நாயக்கன் பாளையம் மேற்கு ஒன்றியம் மருத மலை அடிவாரம், நால்வர் நகர், நவாவூர், சோமையம் பாளையம், கஸ்தூரி நாயக்கன் பாளையம், காளப்ப நாயக்கன் பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கோவை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ஜி.ராமசந்திரன் இரட்டை இலைக்கு வாக்கு கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் நேற்று ஈடுபட்டார். கோவை புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், கவுண்டம்பாளையம் சட்டப்பேரவை உறுப்பினருமான பி.ஆர்.ஜி. அருண் குமார் முன்னிலை வகித்தார்.

பிரச்சாரத்தின் போது வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் பேசியதாவது: நான் வெற்றி பெற்றால் கோவைக்கு தேவையான அத்தனை திட்டங்களையும் நிறைவேற்றுவேன். சின்ன தடாகம்பகுதியில் முக்கிய தொழிலாக செங்கல் சூளை உள்ளது. ஆனால் பல்வேறு நெருக்கடிகளால் தொழில் அழிந்து வருகிறது. இத்தொழிலை அழிய விடக்கூடாது. இத்தொழிலுக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்க நடவடிக்கை எடுப்பேன். தமிழ்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.

விடியா திமுக ஆட்சியும், மத்திய பாஜக ஆட்சியும் தமிழகத்தின் நலனுக்காக எந்த திட்டங்களையும் தரவில்லை. அவர்களால் எந்த பிரயோஜனமும் இல்லை. சமையல் கேஸ் விலை, பெட்ரோல், டீசல் விலை உள்ளிட்ட அனைத்தும் உயர்ந்து விட்டன. அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்களை விடியா திமுக நிறுத்திவிட்டது. மூன்றாண்டு காலம் ஆட்சியில் எந்த ஒரு திட்டங்களையும் மக்களுக்காக நிறைவேற்றவில்லை. ஆகவே, கோவையின் குரலாக உங்களது பிரச்சினைகளை தீர்க்க பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து ராமசாமி நகர், ஆசிரியர் காலனி, கணுவாய், குப்பநாயக்கன் பாளையம், இந்திரா காலனி, திருவள்ளுவர் நகர், சோமையனூர், காளையனூர்,பெரியதடாகம், வீரபாண்டி, வீரபாண்டிபுதூர், பகுடா காலனி, சின்னதடாகம், அம்பேத்கார் நகர், நஞ்சுண்டாபுரம், மடத்தூர், புதூர், வரப்பாளையம், பாப்பநாயக்கன்பாளையம், தாளியூர், கடைவீதி,கொண்ட சாமிநாயுடு நகர், பன்னிமடை பேருந்து நிலையம், பாரதி நகர் ஆகிய இடங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னாள் அமைச்சரும், அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளருமான செ.ம.வேலுச்சாமி, ஒன்றிய கழகச் செயலாளர்கள் கேவிஎன்.ஜெயராமன், கோவனூர் துரைசாமி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x