Published : 28 Apr 2018 07:42 AM
Last Updated : 28 Apr 2018 07:42 AM

குட்கா விவகாரத்தில் சிபிஐ விசாரணை; டிஜிபி ராஜேந்திரன் பதவி விலகக் கோரி திமுகவினர் திடீர் போராட்டம்: ஜெ.அன்பழகன் எம்எல்ஏ உட்பட 400-க்கும் மேற்பட்டோர் கைது

டிஜிபி டி.கே. ராஜேந்திரன் பதவி விலகக் கோரி டிஜிபி அலுவலகம் அருகே திமுகவினர் நேற்று திடீர் போராட்டம் நடத்தினர்.

2016-ம் ஆண்டு குட்கா தயாரிப்பு நிறுவன பங்குதாரர்களில் ஒருவரான மாதவராவ் என்பவரின் வீட்டில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது டைரி ஒன்று சிக்கியது. அந்த டைரியில் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே. ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உட்பட பலருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து, சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர, சிபிஐ விசாரணை நடத்த நீதிமன்றமும் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

போலீஸ் குவிப்பு

இந்நிலையில், டிஜிபி டி.கே. ராஜேந்திரன் பதவி விலக வலியுறுத்தி சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்தை திமுகவினர் முற்றுகையிடப் போவதாக தகவல் பரவியது. அதைத் தொடர்ந்து டிஜிபி அலுவலகத்தில் அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டனர். அதிரடிப்படையினரும் வரவழைக்கப்பட்டனர்.

இணை ஆணையர் அன்பு தலைமையில் இரண்டு துணை ஆணையர்கள் உட்பட 700 போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். கடற்கரை சாலை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. காந்தி சிலை அருகிலும் 50 போலீஸார் நிறுத்தப்பட்டனர்.

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் தலைமையில் திமுகவினர் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் ஒன்றாகக் கூடினர். பின்னர் அங்கிருந்து டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாகச் சென்றனர். டிஜிபிக்கு எதிராக கோஷங்களும் எழுப்பினர்.

டிஜிபி அலுவலகத்துக்கு சுமார் 500 மீட்டருக்கு முன்பாகவே அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்களிடம் காவல் இணை ஆணையர் அன்பு பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோகக் கூறினார். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்து சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். அதைத் தொடர்ந்து ஜெ.அன்பழகன் உட்பட 400 பேரை போலீஸார் கைது செய்து ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் அடைத்து வைத்தனர்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

ஜெ.அன்பழகன் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறும்போது, “குட்கா ஊழலில் தொடர்புடைய டிஜிபி டி.கே. ராஜேந்திரன் பதவி விலகவில்லை என்றால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்” என்றார்.

காலை 9.45 மணி அளவில் ராதாகிருஷ்ணன் சாலையில் திமுகவினர் போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் காலையில் அலுவலகம் சென்றவர்கள் சிரமத்துக்கு உள்ளானார்கள்.

போராட்டத்தில் கைதாகி ராஜரத்தினம் மைதானத்தில் அடைக்கப்பட்டு இருந்தவர்களை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“அமைச்சர் விஜயபாஸ்கர் மீது புகாரை நீதிமன்றத்தில் பதிவு செய்திருப்பது வருமானவரித் துறை. இதற்கு அமைச்சரின் பதில் என்ன? அவர் நியாயமாக, நேர்மையாக செயல்படுபவர் என்றால், பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சிபிஐ விசாரணையை சந்தித்து, நிரபராதி என நிரூபித்துவிட்டு வர வேண்டும்.

குட்கா ஊழலுக்கு அரசும் உடந்தையாக உள்ளது. மாமூல் வாங்கியதாக குற்றச்சாட்டு இருக்கின்ற டிஜிபி டி.கே. ராஜேந்திரனை பதவியில் இருந்து நீக்காமல், அவருக்கு பதவி நீட்டிப்பு, பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

எனவே, முதல்வர் கே.பழனிசாமிக்கும் மாமூல் செல்கிறது. வழக்கு விசாரணையில் வருகின்ற தீர்ப்புக்குப் பிறகு அவர்கள் அனைவரும் சிறைக்குச் சென்று, கம்பி எண்ணுவார்கள். விரைவில் தேர்தல் வரும்போது மக்கள் நல்ல முடிவை எடுப்பார்கள்.

திமுக ஆட்சி வந்ததும் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வரப்படும். கொள்ளையடித்துக் கொண்டிருக்கும், கமிஷன் வாங்கிக் கொண்டிருக்கும் அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அனைவருடைய பட்டியலும் ஆதாரங்களுடன் எங்களிடம் இருக்கின்றன. எனவே, திமுக ஆட்சி வந்ததும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x