

கிருஷ்ணகிரி: அரசியலுக்கு வரவேண்டும் என வீரப்பன் நினைத்தார். ஆனால், அவர் வர முடியவில்லை. அவரது அரசியல் வாரிசாக அவரது மகள் தேர்தலில் நிற்கிறார் என கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வித்யா ராணியை ஆதரித்து, நேற்று மாலை மத்தூர், பர்கூரில் அவர் பேசியதாவது: காட்டிலிருந்தபோது வீரப்பன் சொன்னார், “ஒரு நாள் நான் காட்டிலிருந்து வெளியே வந்து தேர்தலில் நிற்பேன், என் மக்கள் எனக்கு வாக்களிப்பார்கள். நானும் ஒரு நாள் அதிகாரத்துக்கு வருவேன்” என்றார். அவர் வர வில்லை. ஆனால், அவரது அரசியல் வாரிசாக வித்யாராணியை தேர்தல் களத்தில் நிற்க வைத்துள்ளேன்.
காட்டுக்குள் வாழ்ந்த வீரப்பன், நாகப்பாவைக் கடத்தினார். அவர் நினைத்திருந்தால் நமீதாவை கடத்தியிருக்க முடியாதா? ஆனால், தமிழர்கள் அறம் சார்ந்து வாழ்ந்த மறவர்கள். காவிரியில் ஒரு சொட்டு கூட தண்ணீர் கொடுக்க முடியாது எனக் கர்நாடகா கூறுகிறது. ஒரு நொடி நினைத்துப் பாருங்கள், காட்டுக்குள் வீரப்பன் இருந்தால் கர்நாடகா இப்படி கூற முடியுமா? இவ்வாறு அவர் பேசினார்.