

தாம்பரம்: கச்சத்தீவை தாரைவார்த்தது, இலங்கைத் தமிழர்கள் படுகொலையை வேடிக்கை பார்த்தது திமுக-காங்கிரஸ் கூட்டணி அரசுதான் என அதிமுக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் குற்றம் சாட்டினார்.
ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி வேட்பாளர் ஞா.பிரேம்குமாரை ஆதரித்து தாம்பரம் கிழக்குப் பகுதி வால்மீகி தெருவில் அதிமுக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் நேற்று முன்தினம் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அ.தமிழ் மகன் உசேன் பேசுகையில், “ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கட்சி வேட்பாளர் ஞா.பிரேம்குமார் இளைஞர். நன்கு படித்தவர்.
மருத்துவர் ஆவார். மக்களுக்கு பணியாற்ற நினைப்பவர்களுக்கு வயது முக்கியம் அல்ல. அவரது செயல்பாடுதான் முக்கியம். மக்களின் தேவைகளை அறிந்து, அவற்றை தீர்க்கக் கூடியவராக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்தான் நல்ல வேட்பாளராவார்.
பெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் டி.ஆர்.பாலு கடந்த 5 ஆண்டுகளாக மக்களைச் சந்திக்கவில்லை. மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை. தொகுதி பக்கமே எட்டிக்கூட பார்க்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. எனவே மக்களுக்கு சேவையாற்றக் கூடிய வேட்பாளராக இந்த தொகுதியில் களம் காணும் அதிமுக வேட்பாளருக்கு உங்களது வாக்குகளை அளிக்க வேண்டும்.
திமுக ஆட்சிக் காலத்தில்தான் இலங்கைக்கு கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது. இலங்கையில் போர் நடைபெற்றபோது பல லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். அந்த நேரத்தில் தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் மத்தியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசுதான் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
ஆனால், இவர்களால் இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க முடியவில்லை. அதற்கான முயற்சிகளையும் திமுக-காங்கிரஸ் கூட்டணி மேற்கொள்ளவில்லை. நீங்கள் இதை சிந்தித்துப் பார்த்து வாக்களிக்க வேண்டும்.
ரமலான் நோன்புக்காக ஆண்டுதோறும் 5,400 டன் அரிசி வழங்கியது அதிமுக அரசு. அதேபோல், ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு மத்திய அரசு கொடுத்து வந்த ரூ.6 கோடி நிறுத்தப்பட்டது. அதை உயர்த்தி ரூ.8 கோடியாக வழங்கியதும் அதிமுக அரசுதான்.
ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் சென்னையில் தங்கிச் செல்வதற்கான ஹஜ் இல்லம் கட்டியது, உலமாக்களுக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுத்தது, நாகூர் தர்கா குளக்கரையை சீர்செய்வதற்கான நடவடிக்கை எடுத்தது அதிமுக அரசுதான்.
ஆனால், திமுக அரசு இஸ்லாமியர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை? ஆகவே வருகின்ற தேர்தலில் பெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு உங்களது வாக்குகளை அளித்து வெற்றி பெறச் செய்யுங்கள்” என்று அவர் பேசினார்.