Published : 08 Apr 2024 07:57 AM
Last Updated : 08 Apr 2024 07:57 AM

வாக்கு சேகரிக்க வரிசைகட்டும் தலைவர்கள் - மத்திய சென்னை தொகுதி நிலவரம் என்ன?

சென்னை: மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் கட்சித் தலைவர்கள் வருகையால் பிரச்சாரத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டிருப்பதுடன் தொண்டர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் வில்லிவாக்கம், எழும்பூர் (தனி),துறைமுகம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணாநகர் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. இத்தொகுதியில் திமுக சார்பில் தயாநிதி மாறன், அதிமுக கூட்டணியில் தேமுதிகவின் பார்த்தசாரதி, பாஜக சார்பில் வினோஜ் பி.செல்வம், நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் கார்த்திகேயன் போட்டியிடுகின்றனர்.

திமுக வேட்பாளர் தயாநிதி மாறன்: தயாநிதி மாறனை ஆதரித்து அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்யும்போது, சென்னையில் மெட்ரோ ரயில், திரும்பிய பக்கம் எல்லாம் மேம்பாலங்கள், கடல்நீரைகுடிநீராக்கும் திட்டம், ரூ.4 ஆயிரம் கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் உள்பட ஏராளமான பணிகளை திமுக அரசு செய்துள்ளது.

கரோனா காலத்திலும், மழைவெள்ள பாதிப்பின்போதும் நாங்கள் மக்களோடு மக்களாக பயணித்தோம். நமதுவேட்பாளர் கரோனா காலத்தில் தொடர்ச்சியாக 130 நாட்கள் மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கினார்.

மிக்ஜாம் புயல் பாதிப்பின்போது மத்திய சென்னையின் அனைத்து பகுதிகளுக்கும் நானும் அவரும் கட்சியினரும் நேரில் சென்று 3 நாட்கள் தூங்காமல், வீட்டுக்கும் செல்லாமல் மழைநீர் வடியும் வரை தெருவில் நின்று மக்களுக்கு தேவையானதை செய்து கொடுத்தோம்.

மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன்
எழும்பூர் பகுதியில் நேற்று வாக்கு சேகரித்தார்.

நமது வேட்பாளர் சார்பில் சில வாக்குறுதிகளை அளிக்கிறேன். துறைமுகம் தொகுதியில் விரைவில் துணை மின்நிலையம் அமைக்கப்படும். மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டு புதிய கழிவுநீரேற்று நிலையம் அமைக்கப்படும்.

வில்லிவாக்கம் 95-வது வட்டம் கிழக்கு மாடவீதியில் உள்ள மருத்துவமனையை இடித்துவிட்டு பன்நோக்கு மருத்துவமனை கட்டப்படும். தேர்தல் முடிந்ததும் அனைவருக்கும் பட்டா வழங்கப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.

திமுகவினர் வீடு, வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்குகிறார்கள். இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் என்று தலைப்பிடப்பட்ட அந்த துண்டுப் பிரசுரங்களில் திராவிட மாடல் அரசின் இரண்டரை ஆண்டு சாதனைகள், 2024-ம்ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் உள்ள சிறப்பு அம்சங்கள் ஆகியன இடம்பெற்றுள்ளன.

அத்துடன், உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல், பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும் என்ற வாசகங்கள் கொண்ட ஸ்டிக்கர்களை வீடுகள், கடைகள், பொது இடங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் ஒட்டி வருகின்றனர்.

தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி: 'பட்டா மற்றும் குடிநீர் பிரச்சினை, கழிவுநீர் வெளியேறுவதில் உள்ள சிரமம்ஆகியவற்றை தீர்த்து வைப்பேன். திமுகஆட்சி சொத்துவரி, பேருந்து கட்டணம், மின்கட்டணம், பால் கட்டணம் ஆகியவற்றை உயர்த்திவிட்டது.

இதனால் ஏற்பட்ட மக்களின் சுமை குறைக்கப்படும். சென்னையில்அதிகரித்துள்ள போதைப் பொருள் விற்பனை கட்டுப்படுத்தப்படும்' என்று தனதுபிரச்சாரத்தின்போது பார்த்தசாரதி தெரிவித்து வருகிறார்.

தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர்
பிரேமலதா, வில்லிவாக்கம் பகுதியில் பிரச்சாரம் செய்து நேற்று வாக்கு சேகரித்தார்.

இவரை ஆதரித்து வில்லிவாக்கத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் செய்யும்போது, “நம் வேட்பாளர் வெற்றி பெற்றால், மத்திய சென்னை தொகுதி முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டு, பசுமையான பகுதியாக மாற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம்: மழைநீர் வடிகால், போதைப் பொருள் புழக்கம், இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானங்கள், நவோதயா பள்ளிகள், உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை மையப்படுத்தி பிரச்சாரம் செய்கிறார் பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம். திராவிட கட்சிகளை கடுமையாக விமர்சித்தும் வருகிறார். மத்திய சென்னை தொகுதியில் பாஜக வெற்றி பெற்றால்,

மத்திய சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் வினோத் பி.செல்வத்துக்கு ஆதரவாக
அக்கட்சியின் மகளிர் அணி தேசிய தலைவி வானதி சீனிவாசன் ,
தேனாம்பேட்டை பகுதியில் நேற்று வாக்கு சேகரித்தார்.

திமுகவின் குடும்ப அரசியலுக்கு முடிவு கட்டப்படும், மகளிர் உரிமை தொகை 60 சதவீத மக்களுக்கு திமுக வழங்கவில்லை, கடந்த மழை வெள்ளத்தில் மக்கள் அனுபவித்த துயரம் என ஒவ்வொன்றையும் பிரச்சாரத்தில் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டுகிறார்.

இவருக்கு ஆதரவாக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்துள்ளனர்.

நாதக வேட்பாளர் கார்த்திகேயன்: மத்திய சென்னை தொகுதியில் பல இடங்களில் பூர்வ குடிமக்களுக்கு பட்டாஇல்லாத நிலையை மாற்றி, இவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுப்பேன். குடிநீர், கழிவுநீர் கால்வாய் பிரச்சினையை சரிசெய்வேன் என்று டாக்டர் கார்த்திகேயன் வாக்குறுதி அளித்து வருகிறார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.கார்த்திகேயன், புரசைவாக்கம்
திடீர் நகர் பகுதியில் நேற்று வாக்கு சேகரித்தார். | படங்கள்: எஸ்.சத்தியசீலன் |

மக்களின் கோரிக்கையை ஏற்று, எழும்பூர் காவலர் குடியிருப்புப் பகுதியில் பூங்கா, நூலகம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். இவருக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரித்தார்.

தொகுதியில் கட்சித் தலைவர்களின் வருகையால் பிரச்சாரம் விறுவிறுப்படைந்துள்ளதுடன் தொண்டர்கள் மத்தியிலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x