

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், அடையாறு ஆற்றின் கீழ் 56 அடி ஆழத்தில் நடைபெற்று வந்த 'காவிரி' இயந்திரத்தின் சுரங்கப் பாதை பணி அடையாறு ஆற்றை கடந்து வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63.246 கோடி மதிப்பில், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. அதாவது, மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடம் (45.4 கி.மீ), கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ் வரையிலான 4 -வது வழித்தடம் (26.1 கி.மீ.), மாதவரம் - சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடம் (44.6 கி.மீ.) ஆகிய 3 வழிதடங்களில் உயர்மட்டப்பாதை, சுரங்கப்பாதை, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைப்பது உட்பட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த வழித்தடத்தில் பசுமை வழிச்சாலை பகுதியில் இருந்து அடையாறு சந்திப்பு வரையிலான 1.226 கி.மீ. தொலைவுக்கான சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி தொடங்கியது. இதில், முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரமான ‘காவிரி’, 2-வது சுரங்கம் தோண்டும் இயந்திரமான `அடையாறு' ஆகிய 2 இயந்திரங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
இந்த இயந்திரங்கள் டிபி சாலைக்கு கீழே சுரங்கப்பாதை அமைத்து, திருவிக பாலம் அருகே அடையாறு ஆற்றை அடுத்தடுத்து அடைந்தன.
56 அடி ஆழத்தில் சுரங்கப்பாதை: முதலில், காவிரி என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம், அடையாறு ஆற்றுப்படுகையை கடந்த ஆண்டு டிச.30-ம் தேதி அடைந்தது. தொடர்ந்து, இந்த இயந்திரம், அடையாறு ஆற்றின் கீழ் 56 அடி ஆழத்தில் சுரங்கப்பாதை பணியைத் தொடங்கியது.
இந்தப் பணி சீரான வேகத்தில் மிக கவனமாக மேற்கொள்ளப்பட்டது. இங்கு தினசரி அதிகபட்சமாக 7 மீட்டர் வரை மட்டுமே சுரங்கம் தோண்டப்பட்டு வந்தது. கடந்த மாதம் தொடக்கத்தில், ஆற்றின் மத்தியப் பகுதியை 'காவிரி' சுரங்கம் தோண்டும் இயந்திரம் அடைந்திருந்தது.
இந்நிலையில், அடையாறு ஆற்றின் கீழ் நடைபெற்று வந்த காவிரி சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் சுரங்கப்பாதை பணி நிறைவடைந்துள்ளது. இந்த இயந்திரம் அடையாறு ஆற்றை வெற்றிகரமாக கடந்துள்ளது.
மென்மையான பாறைகள்: இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: ஆற்றின் கீழ், தண்ணீர் அழுத்தம் முக்கிய சவாலாகஇருந்தது. மேலும் பாறைகள் மென்மையாக இருந்ததால், தண்ணீர் அழுத்தத்தை பராமரித்து, சீரான வேகத்தில் சுரங்கம் தோண்டும் இயந்திரம் இயக்கப்பட்டது.
தற்போது, இரண்டாவது சுரங்கம் தோண்டும் இயந்திரம் அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. 'காவிரி' சுரங்கம் தோண்டும் இயந்திரம் மே மாத மத்தியில் அடையாறு சந்திப்பை அடைய திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.