Published : 03 Apr 2018 09:33 AM
Last Updated : 03 Apr 2018 09:33 AM

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து சென்னையில் 2-வது நாளாக திமுகவினர் சாலை மறியல்: எம்எல்ஏக்கள் உட்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து 2-வது நாளாக நேற்று சென்னையில் பல இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏக்கள் உட்பட 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் பங்கேற்று கைதானார்கள்.

ஸ்டாலின் வாழ்த்து

அதனைத் தொடர்ந்து நேற்று சென்னையில் பல்வேறு இடங்களில் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மூலக்கடை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்ட சென்னை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை, சின்னமலை, ஆலந்தூர் மவுன்ட் சுரங்கப் பாதை, வாணுவம்பேட்டை, மேடவாக்கம் பிரதான சாலை, எம்ஜிஆர் நகர் மார்க்கெட், கே.கே.நகர், திருவான்மியூர், வேளச்சேரி விஜய நகர் சந்திப்பு, சோழிங்கநல்லூர் சந்திப்பு, கொட்டிவாக்கம் ஆகிய இடங்களில் சாலை மறியல் நடைபெற்றது.

சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே சாலை மறியலில் ஈடுபட்ட சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பூந்தமல்லி நெடுஞ்சாலை தாசப்பிரகாஷ் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்எல்ஏ உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். அண்ணா நகர் வளைவு அருகே மறியலில் ஈடுபட்ட சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன் எம்எல்ஏ தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 500-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.

தபால் நிலையத்துக்கு பூட்டு

திருவொற்றியூர் சாலையில் ஆர்.கே.நகர் கிழக்கு பகுதி திமுக செயலாளர் என்.மருதுகணேஷ், வட சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.எஸ்.திரவியம் உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டு கைதானார்கள். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள தபால் நிலையத்துக்கு பூட்டு போட்டனர். .

திமுக சார்பில் சுமார் 40 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட எம்எல்ஏக்கள் உட்பட 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.

போராட்டம் காரணமாக சென்னை மாநகர், புறநகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட் டனர்.

தமிழகம் முழுவதும்..

இதுபோல, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x