

அரியலூர்: சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமாவளவனுக்கு, மதிமுக சார்பில் வாக்கு சேகரிப்பு கூட்டம், அரியலூர் அண்ணா சிலை அருகே நேற்று நடைபெற்றது.
எம்எல்ஏ கு.சின்னப்பா தலைமை வகித்தார். ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் (மே) அங்கனூர் சிவா, மதிமுக மாவட்டச் செயலாளர் ராமநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் இளங்கோவன் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியது: சுதந்திர இந்திய வரலாற்றில் இது முக்கிய தேர்தலாகும். பாசிசத்துக்கும், குடியரசுக்கும் இடையே நடைபெறும் தேர்தலாகும். திராவிட இயக்கத்தை அழிப்பதே எனது வேலை என பிரதமர் பேசுகிறார். 100 ஆண்டுகள் கடந்த ஒரு இயக்கத் தை இவர் அழிக்கிறேன் என்கிறார். மக்களவை முறையை ஒழித்து விட்டு ஜனாதிபதி ஆட்சி முறையை கொண்டு வந்து விடலாம் என மோடி நினைக்கிறார்.
எனவே, இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், இந்தியாவில் ஜனாதிபதி ஆட்சி நடைமுறைக்கு வந்துவிடும். திராவிட இயக்கம் இருக்கும் வரை அது இயலாது என்பதை மோடி அறிய வேண்டும். இண்டியா கூட்டணியை நிர்வகிக்கும் திறமை ஸ்டாலினுக்கு உண்டு. அவர் கொண்டு வந்துள்ளபல திட்டங்களை பிற மாநிலமுதல்வர்கள் தங்கள் மாநிலத்திலும் பின்பற்றுகின்றனர். அவருடன் இணைந்து பணிபுரிய உள்ள திருமாவளவனை நீங்கள் ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.