அனைத்து காரியங்களிலும் வெற்றி கிட்டட்டும்: முதல்வர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து

அனைத்து காரியங்களிலும் வெற்றி கிட்டட்டும்: முதல்வர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து
Updated on
1 min read

அனைவருக்கும் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி கிட்டட்டும்; அன்பும், அமைதியும் நிலவட்டும்; நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும் என முதல்வர் ஜெயலலிதா விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கை: "வினை தீர்க்கும் தெய்வமாம் விநாயகப் பெருமான் அவதரித்த திருநாளான விநாயகர் சதுர்த்தி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளம் கனிந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சங்கடங்களையும், தடைகளையும் நீக்க வல்ல விநாயகப் பெருமானை வணங்கிய பின்னர் எந்த செயலைத் தொடங்கினாலும், அந்தச் செயலை வெற்றியுடன் செய்வதற்குரிய மன உறுதியும், நம்பிக்கையும் தானாக ஏற்பட்டு அந்தக் காரியம் வெற்றியில் முடியும் என்பதை உணர்ந்து, விநாயகர் சதுர்த்தியன்று மக்கள், களிமண்ணால் செய்யப்பட்ட பிள்ளையாரை இல்லத்தில் வைத்து அலங்கரித்து, எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி பெற வேண்டி பக்தி பரவசத்துடன் வழிபட்டு மகிழ்வார்கள்.

கேட்கும் வரத்தைக் கொடுக்கும் கடவுளாகக் கருதப்படும் வேழமுகத்து விநாயகப் பெருமானின் அருளால், அனைவருக்கும் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி கிட்டட்டும்; அன்பும், அமைதியும் நிலவட்டும்; நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும்; இல்லந்தோறும் இன்பமும், மகிழ்ச்சியும், பொங்கட்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்" என வாழ்த்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in