Published : 07 Apr 2024 05:29 AM
Last Updated : 07 Apr 2024 05:29 AM

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ இந்தியாவில் காலத்தின் கட்டாயம்: முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்கள் ஆதங்கம்

2024 மக்களவை பொதுத் தேர்தல் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் குறித்த அறிவுசார் கருத்து பரிமாற்ற குழு விவாதம் சென்னை சுரானா அண்ட் சுரானா சர்வேதச சட்ட மையத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று பேசுகிறார் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபாலசுவாமி. அருகில் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, டைம்ஸ் ஆஃப் இந்தியா சென்னை ஆசிரியர் அருண் ராம், பெங்களூரு விதி சட்ட மையத் தலைவர் அலோக் பிரசன்னா, அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் ராகுல் நெகு மற்றும் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த சுரானா மைய முதன்மை செயல் அலுவலர் வினோத் சுரானா.

சென்னை: நாடு முழுவதும் நடைபெறவுள்ள 2024 மக்களவைபொதுத் தேர்தல் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள், பிரச்சினைகள் குறித்த அறிவுசார் கருத்து பரிமாற்ற குழு விவாதம் சென்னை சுரானா மற்றும் சுரானா சர்வதேச சட்ட மையத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த குழு விவாதத்தில் முன்னாள் தலைமைதேர்தல் ஆணையர்கள் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, என். கோபாலசுவாமி, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் சென்னை ஆசிரியர் அருண் ராம், பெங்களூரு விதி சட்ட ஆலோசனை மையத் தலைவர் அலோக் பிரசன்னா, சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் ராகுல் ரெகு மற்றும் சுரானா மற்றும் சுரானா சர்வதேச சட்ட மைய முதன்மை செயல் அலுவலர்வினோத் சுரானா ஆகியோர் பங்கேற்றனர்.

பங்கேற்பாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்து முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்கள் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, என். கோபாலசுவாமி ஆகியோர் பேசியதாவது:

வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத் தன்மை: இந்தியாவில் மூன்றாம் தலைமுறை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மையை யாரும் சந்தேகிக்கக்கூடாது. நாடு முழுவதும் தேர்தலை முழுவீச்சில் நடுநிலைமை தவறாமல் வெளிப்படையாக நடத்துவதில் அவை முக்கிய பங்காற்றுகின்றன. தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்துள்ள இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக பழையபடி வாக்குச்சீட்டு முறையை கொண்டு வரவேண்டும் எனக்கூறுவது தவறானது.

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை என திட்டமிடப்பட்டுள்ள ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் இந்தியாவில் காலத்தின் கட்டாயம். அதை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். எளிதாக அமல்படுத்தவும் முடியும். ஆனால் அரசியல் கட்சியினருக்கு இதில் சரியான புரிதல் இல்லை. இதன்மூலம் நாடு முழுவதும் தேர்தலை நடத்துவதற்கான செலவு, நேரம், அரசியல் கட்சியினரின் பிரச்சாரம், மனித உழைப்பு என அனைத்தும் மிச்சப்படும்.

ஆட்சிகள் கவிழ்க்கப்பட்டால்... ஆனால் இதை நாடு முழுவதும் சீராக அமல்படுத்துவதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். சரிநிகர் மக்கள் பிரதிநிதித்துவம், தொகுதி மறுவரையறை, இடஒதுக்கீடு போன்றவற்றை முறையாக கடைபிடித்து 2029-ல் நாடு முழுவதும் மக்களவை மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும்போது. ஒருவேளை நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் ஒரு அரசாங்கம் 2 ஆண்டுகளில் கவிழ்கிறது என்றால், அங்கு மீண்டும் புதிதாக தேர்தல்நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். அந்த சூழலில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் என்ற இந்த திட்டமே கேள்விக்குறியாகி விடும்.

அதுபோன்ற இக்கட்டான சூழலை தடுக்க சட்டரீதியாக தகுந்த முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அதுபோல அரசியல் கட்சிகளின் வங்கி இருப்பு, சொத்து விவரம், நன்கொடை வசூல், மக்களுக்கு அளிக்கும் வாக்குறுதிகளின் நம்பகத்தன்மை போன்றவற்றை வெளிப்படையாக தணிக்கை செய்யும் வகையில் புதிதாக சட்டம் இயற்றப்பட வேண்டும். அமெரிக்காவில் ஒரே நாளில் தேர்தல் நடத்தி முடிக்கப்படுகிறது. அதுபோன்ற சூழல் இந்தியாவிலும் வர வேண்டும்.

பொது தேர்தல் நிதி அவசியம்: பணம் வைத்திருப்பவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்ற நிலைமை மாறி, சாதாரண கடைக்கோடி மனிதனும் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற நிலைமை உருவாக வேண்டும். அப்போதுதான் இந்தியாவில் உண்மையான ஜனநாயகம் மலரும். அதற்காக மற்ற நாடுகளைபோல இந்தியாவிலும் பொது தேர்தல் நிதி ஒதுக்கப்பட வேண்டும்.

குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்றும், உயர் பதவி வகிக்கும் நீதிபதிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் அரசியல் கட்சிகளில் சேர குறைந்தபட்சம் 2 அல்லது 3 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்என்றும் சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும். நீதிபதிகள், அதிகாரிகளுக்கு ஓய்வு கொடுப்பதுபோல அரசியல் கட்சியினருக்கும் குறிப்பிட்ட வயதில் ஓய்வு கொடுக்க அரசியல் கட்சியினர் விரும்புவதில்லை. அதேபோல 100 சதவீத கட்டாய வாக்குப்பதிவு என்பது இந்தியாவில் நடைமுறையில் சாத்தியமற்ற ஒன்று என்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x