Published : 07 Apr 2024 05:50 AM
Last Updated : 07 Apr 2024 05:50 AM
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தின்போது, கட்சியினரிடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை சிலர் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட 40-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்திருந்தனர். ஆனால், திமுக முக்கியப் புள்ளிகள் பலரும் சீட்டுக்குப் போட்டியிட்டதால், நெல்லை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. காங். தரப்பிலும் பலரும் சீட் கேட்டு விண்ணப்பித்த நிலையில், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராபர்ட் புரூஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால், திமுக, காங்கிரஸ் தரப்பிலும் உள்ளூர் நிர்வாகிகள் பலர் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், நெல்லை மக்களவைத் தொகுதியில் முகாமிட்டு, மீனவர் கிராமங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இதற்கிடையில், திசையன்விளையில் திமுக நகரச் செயலாளர் ஜான்கென்னடி தலைமையில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில், மாவட்ட ஊராட்சித் தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமையில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவதாக அமைச்சர் அறிவித்தபோது, ஜான்கென்னடி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மாவட்டச் செயலாளர்தான் பொறுப்புக் குழுவை நியமிக்க வேண்டும் என்று தெரிவித்ததால், இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றியதில், கட்சி நிர்வாகிகளிடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை சிலர் தாக்க முயன்றனர். அமைச்சரின் ஆதரவாளர்கள், அவரை அங்கிருந்து வெளியே அழைத்துச் சென்றனர். பின்னர், போலீஸ் பாதுகாப்புடன் அவர் காரில் புறப்பட்டு சென்றார்.
இதையடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், திருநெல்வேலியின் பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு, சென்னையிலிருந்து நேற்று மாலை திருநெல்வேலிக்கு வந்து, கட்சியினரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT