

சென்னை: தேர்தலில் பணம் பட்டுவாடா புகாரையடுத்து தமிழகத்தில் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
மக்களவைத் தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக அரசியல் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசு ஒப்பந்ததாரர்கள், தொழிலதிபர்களின் வீடுகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது. இதையடுத்து, நேற்று முன்தினம் சென்னை உட்பட தமிழகத்தில் 40 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். இந்த இடங்களில், 2-வது நாளாக நேற்றும் சோதனை தொடர்ந்தது.
சென்னை விருகம்பாக்கத்தில் திமுக எம்எல்ஏ பிரபாகர் ராஜாவின் நெருங்கிய நண்பர் என கூறப்படும் தங்க வேலு வீட்டில் நேற்று முன்தினம் சோதனை நடந்தது. இந்நிலையில், திருவான்மியூரில் அரசு ஒப்பந்ததாரர் ராமசந்திரன் என்பவரது வீடு, அபிராமபுரத்தில் ஓய்வு பெற்ற உதவி செயற்பொறியாளர் தங்க வேலு ஆகியோரது வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். திருநெல்வேலியில் அரசு ஒப்பந்ததாரர் ஆர்.எஸ்.முருகனின் வீட்டில் நேற்று 2-வது நாளாக சோதனை நீடித்தது.
சோதனையில் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று தெரிகிறது. அதேநேரம் முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். அதேபோல், ஈரோடு பெருந்துறை சாலை பழையபாளையத்தை சேர்ந்த சத்திய மூர்த்தியின் கட்டுமான நிறுவனம், கணபதி நகரில் உள்ள அவரது வீட்டில் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். தொடர்ந்து நேற்றும் 2-வது நாளாக அவரது அலுவலகம் மற்றும் பவர் ஹவுஸ் பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் குழாய் பதிக்கும் ஒப்பந்ததாரரான திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிபுதூரை சேர்ந்த வேலு மணியின் வீடு, அலுவலகம் மற்றும் பெட்ரோல் பங்க் உள்ளிட்ட இடங்களிலும், கோவை அவிநாசி சாலை லட்சுமி மில் சந்திப்பு அருகே, அமைச்சர் ஒருவருக்கு நெருக்கமான ரவி என்பவரது அலுவலகத்திலும் 2-வது நாளாக வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தமிழகத்தில் 40 இடங்களில் நேற்றும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும், சோதனை முழுமையாக முடிவடைந்த பிறகே முழுவிவரங்கள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.