Published : 07 Apr 2024 04:06 AM
Last Updated : 07 Apr 2024 04:06 AM

கடல் பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட இலங்கை மீனவர் பத்திரமாக மீட்பு

சென்னை அருகே கடல் பகுதியில் இதயநோயால் பாதிக்கப்பட்ட இலங்கை மீனவரை, இந்திய கடலோர காவல்படை வீரர்கள் பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

சென்னை: சென்னை அருகே கடல் பகுதியில் இதய நோயால் பாதிக்கப்பட்ட இலங்கை மீனவரை, இந்தியக் கடலோர காவல்படை பத்திரமாக மீட்டது.

சென்னையில் உள்ள இந்தியக் கடலோர காவல்படையின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துக்கு ஏப்ரல் 1-ம் தேதி இலங்கை கடல்சார் ஒருங்கிணைப்பு மையத்தில் இருந்து ஓர் அபாய எச்சரிக்கை தகவல் வந்தது. அதில், இலங்கையின் மீன்பிடி படகான ‘கல்பேனி’ இயந்திர கோளாறு காரணமாக நடுக்கடலில் தத்தளிப்பதாகவும், அதில் 6 பேர் உள்ளதாகவும், இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்தியக் கடலோர காவல்படை ரோந்துக் கப்பல்கள், இலங்கை மீன்பிடி படகை தேடும் பணியில் ஈடுபட்டன.

அதில்,கல்பேனி படகு புதுச்சேரி துறைமுகத்தில் இருந்து 40 நாட்டிக்கல் மைல் தொலைவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக, இந்தியக் கடலோர காவல் படையின் தொழில்நுட்ப வீரர்கள் கல்பேனி படகுக்குள் சென்று பழுதான இயந்திரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், போதிய உபகரணங்கள் கிடைக்காததால் பழுது பார்க்கும் பணி பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, பழுதான படகு சென்னை துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதற்கிடையே, அந்த மீன்பிடி படகில் இருந்த சுமித் லலிதா ( 44 ) என்ற மீனவருக்கு திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டு இதய பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த இந்தியக் கடலோர காவல் படையின் ராணி அபக்கா கப்பல் விரைந்து சென்று பாதிக்கப்பட்ட மீனவருக்கு முதலுதவி அளித்தது.

பின்னர், ஹெலிகாப்டர் மூலம் மீனவர் சுமித் மீட்கப்பட்டு கரைக்குகொண்டு வரப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, பழுதடைந்த படகை சரி செய்து இலங்கைக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் இந்தியக் கடலோர காவல் படை ஈடுபட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x