

சென்னை: நடிகர் ப்ரஜன் நடிப்பில் டி 3 என்ற படத்தை தயாரிக்க சினிமா பைனான்சியர் சாமுவேல் காட்சனிடம் ரூ. 4 கோடி பெற்ற தயாரிப்பாளர் மனோஜ், அந்த படத்தின் உரிமையில் 60 சதவீதத்தை சாமுவேலுக்கு வழங்குவதாக ஒப்பந்தம் செய்துள்ளார்.
ஆனால் அந்த ஒப்பந்தத்தை மீறி படத்தை வெளியிட்டு விட்டதாகக்கூறி சாமுவேல் காட்சன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அந்தப் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடக் கூடாது என இடைக்காலத் தடை விதித்திருந்தது. ஆனால் இந்த உத்தரவை மீறி ஓடிடி தளத்தில் அந்தப் படத்தை வெளியிட்டு விட்டதாகக் கூறி மனோஜ், இயக்குநர் பாலாஜிக்கு எதிராக சாமுவேல் வழக்கு தொடர்ந்தார்.
நீதிமன்ற உத்தரவின்படி பாலாஜி, நீதிமன்றத்தில் ஆஜரானார். அவருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி பி.வேல் முருகன், உத்தரவிட்டார். மேலும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாத மனோஜூக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பிக்க பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார்.