திருச்சியில் ஜே.பி.நட்டா ‘ரோடு ஷோ’வுக்கு அனுமதி மறுப்பு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

திருச்சி: திருச்சியில் இன்று ( ஏப்.7 ) பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்கும் ‘ரோடு ஷோ’வுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், திட்டமிட்டபடி ‘ரோடு ஷோ’ நடைபெறும் என பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.

மக்களவைத் தேர்தலையொட்டி, பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் செய்ய உள்ளார். அதன்படி, திருச்சியில் மலைக்கோட்டையில் இருந்து, காந்தி மார்க்கெட் வரை ஜே.பி.நட்டா பங்கேற்கும் ‘ரோடு ஷோ’ நடத்த அனுமதி கேட்டு திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு சுவிதா செயலி மூலம் பாஜகவினர் விண்ணப்பித்திருந்தனர்.

ஆனால் போலீஸாரின் அறிக்கையின் பேரில், அப்பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி என்பதாலும், சமயபுரம் கோயில் பூச்சொரிதல் விழாவுக்கு பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வர வாய்ப்புள்ளதாலும் ‘ரோடு ஷோ’வுக்கு அனுமதி தர முடியாது என்றும், மாற்றுப் பாதையை தேர்வு செய்யுமாறும் திருச்சி சட்டப்பேரவை கிழக்கு தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சாலை தவவளன் பாஜக நிர்வாகிகளிடம் தெரிவித்தார். இதையடுத்து, மாநகராட்சியின் அரியமங்கலம் மண்டல அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தை பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் நேற்று முற்றுகையிட்டனர்.

ஆனாலும், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் அனுமதி தர முடியாது என தேர்தல் அதிகாரி தரப்பில் எழுத்துப் பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. எனினும், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையிலான ‘ரோடு ஷோ’ திட்டமிட்டபடி நடைபெறும் என பாஜக மாநகர் மாவட்டத் தலைவர் ராஜசேகரன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in