“நாம் நிதி கேட்பதை பிச்சை போல நினைக்கின்றனர்” - கனிமொழி கொந்தளிப்பு @ தூத்துக்குடி
தூத்துக்குடி: “டெல்லியில் இன்றும் ஆதார விலை கேட்டு போராடும் விவசாயிகள் மீது தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு எதிரான சட்டங்கள் கொண்டு வந்ததற்கு ஆதரவு தெரிவித்தவர் எடப்பாடி பழனிச்சாமி” என கனிமொழி பேசியுள்ளார்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி இண்டியா கூட்டணி திமுக வேட்பாளர் கனிமொழி ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தோழப்பன்பண்ணை ஊராட்சியில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், “தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இதுவரை பார்க்காத அளவுக்கு மழை வெள்ளத்தை மக்கள் சந்தித்தனர். அவர்களுக்கு நிவாரண பொருட்கள், நிவாரண நிதி, வீடு இழந்தவர்கள் வீடு கட்டுவதற்கு ரூ.4 லட்சம் ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். விவசாயிகள் ஆடு மாடு இழந்தவர்கள் என எல்லாருக்கும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், பிரதமர் இதுவரை தமிழகத்துக்கு நிவாரண நிதி கொடுக்கவில்லை. நிவாரணம் வேண்டும் எனக் கேட்டபோது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடி முழுவதும் பார்வையிட்டு சென்றார். ஆனால், நாம் நிதி கேட்பது பிச்சை கேட்பது போல் நினைக்கின்றனர். அதனை மாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
நமது வரியெல்லாம் வாங்கி செல்கின்றனர். தமிழகத்துக்கு எந்த நிதியும் கொடுக்க மாட்டார்கள். உத்தரப் பிரதேசத்துக்கு இரண்டு மடங்கு அதிகமாகக் கொடுக்கின்றனர். மழை வெள்ளத்தில் எதுவும் கொடுக்கவில்லை. ஆனால், தேர்தல் வந்தவுடன் திரும்பத் திரும்ப வருகிறார்கள். தமிழகத்தில் யாரும் வாக்களிக்க போவதில்லை என்று அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.
100 நாள் வேலை முறையாக கிடைப்பதில்லை. இண்டியா கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் 100 நாள் வேலையை 150 நாளாக ஆக்குவோம். சம்பளம் ரூ.400 ஆக உயர்த்தி வழங்கப்படும். இவையனைத்தும் காங்கிரஸ் மற்றும் திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் சுங்கச்சாவடி மூடப்படும். இவற்றை செய்ய வேண்டும் என்றால், உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். டெல்லியில் தற்போதும் ஆதார விலை வேண்டும் என்று கோரிக்கை வைத்த விவசாயிகள் மீது தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு எதிரான சட்டங்கள் கொண்டு வந்ததற்கு ஆதரவு தெரிவித்தவர் எடப்பாடி பழனிச்சாமி” என்றார்.
இந்தப் பிரச்சார நிகழ்வில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினர் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இண்டியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
