

கோவில்பட்டி: “கொடுப்பவர் ராகுல் காந்தி. மக்களிடம் இருந்து எடுப்பவர் மோடி”என கோவில்பட்டியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பேசினார்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கோவில்பட்டியில் பயணியர் விடுதி முன்பு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியது: “தூத்துக்குடி என்றாலே ஸ்டெர்லைட் ஆலைதான் நினைவுக்கு வருகிறது. அந்த ஆலையை மூடுவதற்கு எவ்வளவு போராட்டத்தை நடத்தினோம் என்பது அனைவரும் அறிவர்.
மோடி கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மீண்டும் வாக்கு கேட்க வருகிறார். என்னை ஒருமுறை பிரதமராக ஆக்குங்கள், உங்கள் ஒவ்வொருரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் வரவு வைக்கிறேன் என்றார். இதனை நம்பி வங்கிகளில் கணக்கு இல்லாதவர்கள் புதிதாக கணக்குகளைத் தொடங்கினர். ஆனால், யாருக்கும் பணம் வழங்கவில்லை. இதனால் கணக்கு தொடங்கியவர்கள், வங்கிக்கு சென்று தங்களது பணத்தை கேட்டபோது, அதுவும் குறைந்தபட்ச தொகை இல்லாததால் வங்கி நிர்வாகம் பிடித்தம் செய்து கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர்கள் தங்களிடமிருந்த பணத்தையும் இழந்துள்ளனர்.
2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றார் மோடி. ஆனால், இருக்கின்ற வேலைவாய்ப்பும் பறிபோய்விட்டது. காங்கிரஸ் ஆட்சியில் கடந்த 2014-ம் ஆண்டு சமையல் எரிவாயு விலை ரூ.420 என்றிருந்ததை பாதியாக தருவேன் என்றார். ஆனால், இன்று அதன் விலை ரூ.1,100. மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தியாவில் உள்ள ஒவ்வொருவர் மீதும் ரூ.1.50 லட்சம் கடன் சுமையை ஏற்றி உள்ளார். அந்த அளவுக்கு கடன் வாங்கி உள்ளார்.
தமிழகத்தின் உரிமைகள், நலன், பாதுகாப்பு, வளர்ச்சி என அனைத்தையும் பறிக்கிறார் மோடி. இதற்கு துணை போனது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. மின் கட்டண உயர்வுக்கு மத்திய அரசு கேட்டபோது, உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்ட எடப்பாடிதான் காரணம்.
தற்போது தமிழ்நாட்டில் நடைபெறும் ஆட்சியில், கொடுத்த வாக்குறுதிகளில் 80 சதவீதத்தை நிறைவேற்றி உள்ளனர். ஒரு ஆட்சி மக்களுக்கான ஆட்சியாக இருக்க வேண்டும். மக்களுக்கு எதிரான ஆட்சியாக இருக்கக் கூடாது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை ஐ.நா சபையே பாராட்டியது. உலக அளவில் புகழ்பெற்ற இப்படிப்பட்ட திட்டத்தை கொண்டு வந்தது காங்கிரஸ் ஆட்சி. ஆனால், மோடி என்ன கொண்டு வந்தார்?
இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு தேவையான ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் ஜனநாயகத்துக்கும், பாசிசத்துக்கும் இடையேயான தேர்தல். கொடுப்பவர் ராகுல் காந்தி. மக்களிடம் இருந்து எடுப்பவர் மோடி. உங்களுக்கு கொடுப்பவர் வேண்டுமா? எடுப்பவர் வேண்டுமா? மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இந்த தேசத்தை காப்பாற்ற, மண்ணை மீட்டெடுக்க, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க இண்டியா கூட்டணியை ஆதரிக்க வேண்டும். உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்” என்றார்.
இந்தப் பிரச்சார நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினர் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ், நகர திமுக செயலாளர் கா.கருணாநிதி, காங்கிரஸ் மாவட்ட பொறுப்பாளர்கள் கே.ஆர்.எஸ்.பொன்னுப்பாண்டியன், கே.பிரேம்குமார், சி.சுப்புராயலு, கே.டி.பி.அருண்பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் நகர செயலாளர் அ.சரோஜா, மார்க்சிஸ்ட் நகர செயலாளர் கே.சீனிவாசன், மதிமுக நகர செயலாளர் எஸ்.பால்ராஜ், மக்கள் நீதி மய்யம் பொறுப்பாளர் ரமேஷ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.