ரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்கு கோரி வழக்கு: தேர்தல் ஆணையம், தெற்கு ரயில்வே பதிலளிக்க உத்தரவு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: மக்களவைத் தேர்தலில் ரயில்வே ஊழியர்களுக்கும் தபால் வாக்கு வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் ஆணையமும், தெற்கு ரயில்வே நிர்வாகமும் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் ராணுவம், துணை ராணுவப்படை, தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் மத்திய, மாநில அரசு அதிகாரிகள், ஊடகத்தினர் மற்றும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் தங்களது வாக்குகளை சிரமமின்றி செலுத்தும் வகையில் தபால் வாக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் ரயில்வே ஊழியர்களையும் சேர்த்து ரயில்வே ஊழியர்களுக்கும் தபால் வாக்குஅளிக்க வேண்டும் எனக் கோரி,தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தில் கண்காணிப்பாளராகப் பணியாற்றும் ராம்குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், ‘‘கேரளாவில் ரயில்வேதுறையினருக்கு தபால்வாக்குஅளிக்க அனுமதியளிக்கப்பட்டுள் ளது. 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் ரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்கு அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தபால் வாக்கு ரயில்வே ஊழியர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது.

மேலும், தெற்கு ரயில்வேயில் பணியாற்றும் ரயில் ஓட்டுநர்கள், ரயில் நிலைய அதிகாரிகள், பயணச்சீட்டு பரிசோதகர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் வாக்குப்பதிவு நாளன்று விடுப்பு எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை.எனவே ரயில்வே ஊழியர்களும் தங்களது வாக்கை தபால் வாக்கு மூலமாக செலுத்த அனுமதியளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில்ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன்ராஜகோபாலன், ‘‘ரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்குப்பதிவுக்கு அனுமதியளிப்பது தொடர்பாக தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பியும், இன்னும் ரயில்வே நிர்வாகம் தரப்பில் எந்தபதிலும் இல்லை. தபால் வாக்குப்பதிவுக்கு விண்ணப்பி்க்க மார்ச் 25 கடைசி நாள் என்பதால் இனிமேல் அனுமதி்க்க இயலாது’’ என்றார்.

அதையடுத்து நீதிபதிகள், ‘‘தேர்தல் ஆணையத்தின் கடிதத்துக்கு பதிலளிக்காதது ஏன்? என்பது குறித்து தெற்கு ரயில்வே நிர்வாகமும், ரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்கு அளிக்க முடியுமா என்பது குறித்து தேர்தல் ஆணையமும் ஏப்.10-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in