காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ‘நீட்’ குறித்த அறிவிப்பு; பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை சிக்கலை ஏற்படுத்தும் - மருத்துவர் பி.பாலகிருஷ்ணன்

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ‘நீட்’ குறித்த அறிவிப்பு; பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை சிக்கலை ஏற்படுத்தும் - மருத்துவர் பி.பாலகிருஷ்ணன்
Updated on
2 min read

சென்னை: பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படை யிலான மருத்துவ மாணவர் சேர்க்கை சிக்கலை ஏற்படுத்தும் என்று தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் முன்னாள் தலைவர் மருத்துவர் பி.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை என்பது தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (‘நீட்’) மூலம் நடைபெறுகிறது. ‘நீட்’ தேர்வுக்கு நாடு முழுவதும் ஆதரவும், எதிர்ப்பும் நிலவி வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் திமுக, அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக ஆகிய கட்சிகள் ‘நீட்’ தேர்வு வேண்டாம் என்ற முடிவை எடுத்து செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ‘இண்டியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ்வெளியிட்ட தேர்தல் அறிக்கையில்,“விருப்பப்படும் மாநிலங்கள் மட்டுமே நீட் தேர்வு நடத்தி கொள்ளும் வகையில் சட்டம் இயற்றப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் முன்னாள் தலைவரும், ஜனநாயக தமிழ்நாடு அரசுடாக்டர்கள் சங்க மாநிலத் தலைவரும், அகில இந்திய அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தேசிய செயல் தலைவருமான மருத்துவர் பி.பாலகிருஷ் ணன் கூறியதாவது:

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி ‘நீட்’ தேர்வு நடைபெறுகிறது. விரும்பும் மாநிலங்கள் ‘நீட்’ தேர்வைநடத்திக் கொள்ளலாம் என்பதை நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று, உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கும்பட்சத்தில் இது சாத்தியமாகலாம். ஆனால், மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறை என்பது இந்தியா முழுவதும் ஒரே மாதிரியாக இருப்பது தான் நல்லது.

ஒரு மாநிலம் ‘நீட்’ தேர்வின் படியும், மற்றொரு மாநிலம் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலும் மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தினால் சிக்கல்தான் ஏற்படும். அந்தந்த மாநில அளவில் வேண்டுமானால் மாணவர் சேர்க்கை சிக்கல் இல்லாமல் நடக்கலாம்.

ஆனால், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வில் மாணவர்களுக்கு எந்த முறையில் இடங்களை ஒதுக்கீடு செய்ய முடியும். மாணவர்களிடம் வேறுபாடுகள் வருவது மட்டுமின்றி, ‘நீட்’ தேர்வு மதிப்பெண்ணில் படித்தவர் சிறந்த மருத்துவரா, பிளஸ் 2 மதிப்பெண்ணில் படித்தவர் சிறந்த மருத்துவரா? என்ற போட்டியும் ஏற்படும்.

இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் தமிழக மாணவர்கள் மருத்துவம் படிக்கின்றனர். அதனால், இந்தியா முழுவதுக்கும் மருத்துவப் படிப்புகளுக்கு ஒரு பொதுவான தேர்வு இருப்பதில் தவறு இல்லை. அதனால், அந்தந்த மாநில மொழியிலும், மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையிலும் ‘நீட்’ தேர்வை நடத்த வேண்டும். அந்த மதிப்பெண்ணுடன், பிளஸ் 2தேர்வில் பெற்ற மதிப்பெண்ணையும் கணக்கில் கொண்டு (50:50) மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்துவது சிறந்த தாக இருக்கும்.

அது, பிளஸ் 2 தேர்வில் பெற்றமதிப்பெண்ணுக்கும் மரியாதை கொடுக்கும் விதமாகவும் அமையும். அந்தந்த மாநில பாடத்திட்டத்தின்படி தேர்வு நடத்தும்போது, பயிற்சி மையங்களுக்கு செல்லத் தேவையில்லை. பிளஸ் 2 வரை நன்றாக படித்திருந்தாலே தேர்வில் நல்ல மதிப்பெண் பெற முடியும்.

ஏற்கெனவே தமிழகத்தில் நுழைவுத் தேர்வு மதிப்பெண் மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப்படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழகத்தின் தற்போதைய ‘நீட்’ நிலை: ‘நீட்’ தேர்வு வருவதற்கு முன்பு தமிழகத்தில் ஆண்டுதோறும் 40-க்கும் குறைவான அரசு பள்ளி மாணவர்களே மருத்துவப் படிப்பில் சேர்ந்து வந்தனர். ‘நீட்’ தேர்வுக்கு பின்னர் இந்த எண்ணிக்கை ஒற்றை இலக்கமாக குறைந்தது.

கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கு பின்னர், மருத்துவப் படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மூன்று இலக்கமாக மாறியுள்ளது. 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு 2020-21-ம் ஆண்டில் 435 இடங்கள், 2021-22-ம் ஆண்டில் 555 இடங்கள், 2022-23-ம் ஆண்டில் 584 இடங்கள் கிடைத்தன. 2023-24-ம் கல்வியாண்டில் சுமார் 650 அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்து படித்து வருகின்றனர்.

அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படித்து முடிக்கும் வரை கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் தமிழக அரசு ஏற்றுக்கொள்வது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in