

சென்னை: கோடை விடுமுறையில் பள்ளிக்கல்வி துறை தொடர்ந்து மாற்றம் செய்வது குழப்பத்தை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து இத்துறையினர் கூறியதாவது:
ஆசிரியர் சண்முகநாதன்: 4 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களை பொறுத்தவரை குழப்பமானஅறிவிப்புகளை கல்வித் துறைவெளியிட்டு வருகிறது. நேற்று முன்தினம் வெளியான அறிவிப்பின்படி பல மாவட்டங்களில் நேற்றுடன்தொடர் விடுமுறை வழங்கப்பட்டுவிட்டது. திடீரென, ஏப்ரல் 12 வரை பள்ளிக்கு வர வேண்டும் என மதியம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்கள் தங்கள் வீடுகளுக்கு சென்று வருவதில் சிரமங்கள் உருவாகியுள்ளன.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பி.பேட்ரிக் ரெய்மாண்ட்: கோடை விடுமுறை அறிவிப்பை துறை இயக்குநர்தான் வெளியிட வேண்டும். ஆனால், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலம் வழங்குவது குழப்பத்தையே ஏற்படுத்தும். 4 முதல் 9-ம்வகுப்புகளுக்கு இன்னும் 2 தேர்வுகள் மட்டுமே உள்ளன. இவற்றைஏப். 6, 13, 16 போன்ற தேதிகளி லேயே நடத்தி முடிக்கலாம்.
அதைவிடுத்து, ஏப்ரல் இறுதி வரை கொண்டு சென்றதால் மாணவர்களை மீண்டும் தேர்வுக்கு அழைத்து வருவதே சவாலாக இருக்கிறது. வெயிலின் தாக்கமும் அதிகமாக உள்ளது. எனவே, மாணவர்கள் நலன் கருதி தேர்தலுக்கு முன்பே தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வி துறை முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, தேர்தலுக்கு முந்தைய நாட்களில் தேர்வுக்கால அட்டவணையில் திருத்தம் செய்தால், தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே ஏப். 19-ம் தேதி தேர்தல் முடிந்த பிறகு எஞ்சிய 2 தேர்வுகளை நடத்த கல்வித் துறை முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.