Published : 06 Apr 2024 06:37 AM
Last Updated : 06 Apr 2024 06:37 AM
சென்னை: அதிமுக செய்தி தொடர்பாளரான திருநங்கை அப்சரா ரெட்டிக்கு எதிராக அவதூறு வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் ரூ.50 லட்சம் நஷ்டஈடு வழங்க யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீனுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யஉயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அதிமுக செய்தி தொடர்பாளரான திருநங்கை அப்சரா ரெட்டி தனக்கு எதிரான அவதூறு கருத்துகளுடன் கூடிய வீடியோவை யூடியூபரான ஜோமைக்கேல் பிரவீன் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். எனவே அவர் மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனக் கோரி உயர் நீதிமன்றத்தில் மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், ``ஒருவருக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவிடும் கருத்துகள் நியாயமான வரம்புக்கு உட்பட்டவையாக இருக்க வேண்டும். அவை அவதூறு பரப்பும் வகையிலோ மற்றவர்களின் தனிப்பட்ட உரிமையில் தலையிடும் வகையிலோ இருக்கக் கூடாது. எனவே பாதிக்கப்பட்டுள்ள மனுதாரரான அப்சரா ரெட்டிக்கு, யூடியூபரான ஜோ மைக்கேல் பிரவீன் ரூ.50 லட்சத்தை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும்'' என உத்தரவிட்டிருந்தார்.
மீண்டும் விசாரணை: ``தனது தரப்பு நியாயத்தை கேட்காமலேயே ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதால் அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்'' எனக் கோரி ஜோ மைக்கேல் பிரவீன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ``அப்சரா ரெட்டி தரப்பில், இந்த வழக்கில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இது ஜோ மைக்கேல் பிரவீனுக்கு நன்றாகத் தெரியும்'' எனக்கூறி அதற்கான ஆதாரங்களைத் தாக்கல் செய்தார்.
அவற்றை ஆய்வு செய்த நீதிபதி என்.சதீஷ்குமார், ``நீதிமன்றத்திலிருந்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதைப் பெற்றுக்கொண்டு தனக்காக வழக்கறிஞரை நியமித்துள்ள ஜோ மைக்கேல் பிரவீன்அதன்பிறகு வழக்கு விசாரணையில் பங்கேற்காத நிலையில் தனக்கு நோட்டீஸ் வரவில்லை எனக் கூறுவதை ஏற்க முடியாது. எனவே அப்சரா ரெட்டிக்கு ரூ. 50 லட்சம் நஷ்ட ஈடு வழங்கும்படி மனுதாரரான ஜோ மைக்கேல்பிரவீனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யமுடியாது'' என மறுப்பு தெரிவித்து மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT