Published : 06 Apr 2024 06:11 AM
Last Updated : 06 Apr 2024 06:11 AM
சென்னை: குற்ற வழக்கு ரத்து செய்யப்பட்ட நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத் துறை விசாரிக்க அதிகாரம் இல்லைஎன தெளிவுபடுத்தியுள்ள உயர் நீதிமன்றம், தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் செயல்பட்டு வரும், ‘ஓஷன் லைப் ஸ்பேஸஸ்’ என்றகட்டுமான நிறுவனத்தை எஸ்.கே.பீட்டர் மற்றும் ஸ்ரீராம் ஆகியோர் இணைந்து நடத்தி வந்தனர். இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்த ராம், தனக்குரிய பங்கை கேட்டதாகவும், அதற்கு எஸ்.கே.பீட்டர் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
அதையடுத்து ஸ்ரீராம் அளித்த புகாரின்பேரில் எஸ்.கே.பீட்டர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விவகாரத்தில் ரூ.50 கோடி வரை சட்டவிரோதபணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாகக் கூறி, எஸ்.கே.பீட்டர் மற்றும்அவருடைய கட்டுமான நிறுவனம்,வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
தொழில் போட்டி: பின்னர், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத் துறை, உரிய ஆவணங்களுடன் விசாரணைக்கு ஆஜராகும்படி எஸ்.கே.பீட்டருக்கு சம்மன் அனுப்பியது.
இதை எதிர்த்து பீட்டர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘‘எனக்கும், ஸ்ரீராமுக்கும் இடையே ஏற்பட்ட தொழில் போட்டிகாரணமாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் பதிவு செய்திருந்த வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. அந்த வழக்கின் அடிப்படையி்ல் அமலாக்கத் துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் எனக்கு எதிராக வழக்குப்பதிவு செய்திருப்பது செல்லாது. எனவே அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும்’’ எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன்,‘‘மத்திய குற்றப்பிரிவு போலீஸார் பதிவு செய்துள்ள வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்ட நிலையில், அதனடிப்படையில்அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள வழக்கின் விசாரணையை தொடர முடியாது’’ என்றார்.
4 வாரங்களில்..: பதிலுக்கு அமலாக்கத் துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், அரசு சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆகியோர் ஆஜராகி, மத்திய குற்றப்பிரிவு போலீஸார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்பப் பெறக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மூல வழக்கான மத்திய குற்றப்பிரிவு வழக்கு ரத்து செய்யப்பட்டு விட்டதால் அந்த வழக்கின் அடிப்படையில் பதியப்பட்ட சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கின் விசாரணையைத் தொடர அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இல்லை’’ எனக்கூறி அந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
மேலும் மனுதாரரின் நிறுவனத்திடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை 4 வாரங்களில் திருப்பி கொடுக்க வேண்டும் எனஉத்தரவிட்ட நீதிபதிகள், ஒருவேளைமத்திய குற்றப்பிரிவு பதிவு செய்திருந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டால் அமலாக்கத் துறையினரும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கலாம், என உத்தரவிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT