Published : 06 Apr 2024 10:26 AM
Last Updated : 06 Apr 2024 10:26 AM

திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் 4 முனை போட்டி - ஒரு பார்வை

சசிகாந்த் செந்தில் (காங்கிரஸ்)

திருவள்ளூர்: திருவள்ளூர் (தனி) மக்களவைத் தொகுதியில் 4 முனை போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் வசம் உள்ள இத்தொகுதியை இம்முறை காங்கிரஸ் தக்க வைத்துக்கொள்ளுமா? அல்லது வேறு கட்சி கைப்பற்றுமா? என்ற கேள்வி வாக்காளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் வரிசைஎண் அடிப்படையில் முதல் தொகுதியாக உள்ளது திருவள்ளூர்(தனி) மக்களவைத் தொகுதி. கும்மிடிப்பூண்டி, பொன்னேரி(தனி), திருவள்ளூர், பூந்தமல்லி (தனி), ஆவடி,மாதவரம் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகள் அடங்கிய இந்த மக்களவைத் தொகுதியில் 20 லட்சத்து 85 ஆயிரத்து 991 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்நிலையில், தற்போதைய மக்களவைத் தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸ், தேமுதிக, பாஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் 8 பேர், சுயேட்சை வேட்பாளர்கள் 6 பேர் என, 14 பேர் போட்டியிடுகின்றனர்.

சசிகாந்த் செந்தில் (காங்கிரஸ்): திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் இண்டியா கூட்டணி சார்பில் களம் இறங்கியுள்ள சசிகாந்த் செந்தில், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி. கர்நாடகா கேடர் ஐஏஎஸ் அதிகாரியான இவர், கர்நாடகா மாநிலம்-சித்ரதுர்கா, ராய்ச்சூர் மாவட்டங்களில் ஆட்சியராகவும், பல்வேறு துறைகளிலும் பணியாற்றியுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பரில் தன் பணியை ராஜினாமா செய்த சசிகாந்த் செந்தில், ‘தேசத்தை கட்டமைக்கும் அடிப்படை அமைப்புகள் சிதைக்கப்படுகின்றன. அவற்றை காப்பாற்ற வேண்டும்’ என்று கூறி, தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டவர்.

சசிகாந்த் செந்தில், ஏழை குடும்பபெண்களுக்கு ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் நிதி உதவி வழங்கப்படும், இந்தியா முழுவதும் சாதி வாரிகணக்கெடுப்பு நடத்தப்படும் என்பன உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.

ஏற்கெனவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் சசிகாந்த் செந்தி லுக்கு வாக்கு சேகரித்தனர்.

பொன்.வி.பாலகணபதி (பாஜக): பாஜக சார்பில், அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பொன்.வி.பாலகணபதி களம் இறக்கப்பட்டுள்ளார். இவர், நாள் தோறும் பாஜக மற்றும் பாமக, அமமுக, தமாகா உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்களுடன் ஆவடி, திருவள்ளூர், பூந்தமல்லி, கும்மிடிப்பூண்டி என,சட்டப்பேரவை தொகுதிகள் வாரியாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

பொன்.வி.பாலகணபதி, மத்திய பாஜக அரசின் திட்டங்கள் தொடரவும், திருவள்ளூர் தொகுதி மக்களின் கோரிக்கைகள் நிறைவேறவும் தனக்கு வாக்களிக்கவேண்டும் என கூறி, பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவும், விவசாயத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுப்பேன் என வாக்குறுதிகளை அளித்தும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

கு.நல்லதம்பி (தேமுதிக): அதிமுக கூட்டணி சார்பில் களம் இறக்கப்பட்டுள்ள கு.நல்லதம்பி, தேமுதிக இளைஞரணி செயலாளர். சைக்கிள் பஞ்சர் ஒட்டும் கடை நடத்தி வந்த இவர், கடந்த 2011 சட்டப்பேரவை தேர்தலில் எழும்பூர்(தனி) தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு, திமுக வேட்பாளரான, முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியை வென்றவர்.

அதிமுகவின் வாக்கு வங்கி மற்றும் மறைந்த தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் அனுதாப அலை வெற்றிக்கனியை பறித்து தரும் என்ற நம்பிக்கையோடு தேமுதிக மற்றும் அதிமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கு.நல்லதம்பிக்காக தீவிரபிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏழை-எளிய மக்கள் என்னை எளிதில் அணுகலாம் என்று கூறும் கு.நல்லதம்பி, திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் இளைஞர்கள் வேலைவாய்ப்பை உறுதி செய்வேன், மீனவர்கள் வாழ்வாதாரத்துக்கு ஆபத்தாக உள்ள அதானி துறைமுக விரிவாக்கத் திட்டம் வராமல் இருக்க பாடுபடுவேன், உரிய நடவடிக்கை எடுப்பேன் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

மு.ஜெகதீஷ் சந்தர் (நாம் தமிழர்): ஒவ்வொரு தேர்தலையும் தனியாகவே சந்திந்து வரும் நாம் தமிழர் கட்சி சார்பில், அக்கட்சியின் மாதவரம் சட்டப்பேரவை தொகுதியின் தகவல் தொழில்நுட்பப் பாசறை செயலாளர் மு.ஜெகதீஷ் சந்தர் திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். சென்னையில் தனியார் பள்ளிக்குழுமம் ஒன்றில் டெக் கன்சல்டன்டாக பணிபுரிந்து வரும் மு.ஜெகதீஷ் சந்தர், நாள்தோறும் தங்கள் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்களுடன் திறந்த வெளி வாகனத்தில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருவள்ளூர், மாதவரம் என, தொகுதியின் பல்வேறு பகுதிகளில் தன் சின்னமான மைக்குடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

கிராமப் புறங்களில் இளைஞர்களுடன் கேரம் விளையாடியும்,இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் கலந்துரையாடியும் வாக்கு சேகரித்து வரும் மு.ஜெகதீஷ் சந்தர், திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்கு தேவையான வற்றை நிறைவேற்றவும், இயற்கை வளங்களை பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை எடுப்பேன் என, வாக்குறுதி அளிக்கிறார்.

மேலும், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இளைஞர்கள், ‘நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்போம்! நாளைய தலைமுறைக்கு வாழ்வளிப்போம்’ என வாசகத்துடன் துண்டு பிரசுரங்கள், சமூக வலைதளங்கள் மூலம் இவருக்கு வாக்குசேகரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x