Published : 06 Apr 2024 12:17 PM
Last Updated : 06 Apr 2024 12:17 PM
அரியலூர்: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைதான் இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என சிதம்பரம் மக்களவைத் தொகுதி விசிக வேட்பாளரும், அக்கட்சியின் தலைவருமான திருமாவளவன் தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டம் செந்துறை, நக்கம்பாடி, சொக்கநாதபுரம், நமங்குணம், வஞ்சினபுரம், மணப்பத்தூர், சோழன்குடிக்காடு, படைவெட்டிக்குடிக்காடு, அயன்தத்தனூர், குழுமூர், அங்கனூர் உள்ளிட்ட கிராமங்களில் நேற்று அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது, “அம்பானி, அதானிக்காகவே பிரதமர் மோடி 10 ஆண்டு கால ஆட்சியை நடத்தினார். அம்பேத்கர் எழுதிய அரசமைப்பு சட்டத்தை மாற்றுவதே பாஜகவின் நோக்கம். எனவே, அரசமைப்பு சட்டத்தைப் பாதுகாக்க பானை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்” எனக் கூறி வாக்கு சேகரித்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை, விளிம்புநிலை மக்களை மீட்கும் அறிக்கை. வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளை சீர்செய்யும் அறிக்கை.
மத்திய அரசுப் பணியில் பெண்களுக்கு இடஒதுக்கீடு, இடஒதுக்கீட்டில் 50 சதவீத உச்சவரம்பை உயர்த்துவது, நீட் தேர்வில் மாநில அரசின் முடிவுக்கே விடுவது, பொதுப் பட்டியலில் உள்ளவற்றை மாநில பட்டியலுக்கு மாற்றுவது உள்ளிட்டவை வரவேற்கத்தக்க திட்டங்கள்.
இத்திட்டங்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் உள்ளன. எனவே, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தான் இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர். இவ்வாறு அவர் கூறினார்.
பிரச்சாரத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT