“முல்லைப் பெரியாறு பிரச்சினையில் சு.வெ ஒருமுறை கூட குரல் எழுப்பாதது ஏன்?” - அதிமுக வேட்பாளர் கேள்வி

“முல்லைப் பெரியாறு பிரச்சினையில் சு.வெ ஒருமுறை கூட குரல் எழுப்பாதது ஏன்?” - அதிமுக வேட்பாளர் கேள்வி
Updated on
1 min read

மதுரை: ''முல்லைப் பெரியாறு விவகாரத்தில் ஐந்து ஆண்டுகளில் ஒரு முறைகூட சு.வெங்கடேசன் எம்.பி மதுரை மக்களுக்காக குரல் கொடுக்காதது ஏன்?'' என்று அதிமுக வேட்பாளர் மருத்துவர் சரவணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மருத்துவர் பா.சரவணனை ஆதரித்து திருமோகூர், புதுதாமரைப்பட்டி, பூலாம்பட்டி,சிட்டம்பட்டி, மாங்குளம், அப்பன்திருப்பதி, வண்டியூர், ஒத்தக்கடை, உத்தங்குடி ஆகிய பகுதிகளில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது, வேட்பாளர் சரவணன் பேசுகையில், ''மதுரை மக்களவைத் தொகுதியில் 5 ஆண்டாக எம்.பியாக இருந்த சு.வெங்கடேசன் தனது நிதியிலிருந்து மக்களுக்கு செய்த திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். 3 மாதங்களுக்கு முன்பு சு.வெங்கடேசன் 5 ஆண்டுகளில் திட்டப்பணிகள் 100 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது என கூறினார். தற்போது 90 சதவிகிதப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது என முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார். இந்த விவரங்களை கேள்வி எழுப்பினால் விளக்கம் அளிக்க முன்வராமல் பதறுகிறார். வழக்கு தொடுப்பேன் என்று மிரட்டுகிறார்.

கம்யூனிஸ்ட்களை பொறுத்தவரையில் தமிழகத்தில் ஒரு கொள்கை, கேரளாவில் மற்றொரு கொள்கை என இரட்டை வேடம் போடுகிறது. அதனாலே முல்லைப்பெரியாறு விவகாரத்தில் சு.வெங்கடேசன் இதுவரை மதுரை மாவட்ட மக்களுக்காகவும், விவசாயிகளுக்காகவும் இதுவரை மக்களவையிலோ, பொதுவெளியிலோ குரல் எழுப்பவில்லை. இப்படி சு.வெங்கடேசனும் அவரது கட்சி பானியில் இரட்டை வேடம்போடுகிறார்.

ஆனால், அதிமுக ஆட்சியில் முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக தொடர்ந்து 4 முறையாக உயர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 152 அடியாக உயர்த்தவும் அதிமுக நடவடிக்கை எடுக்கும். அதற்காக மக்களவையில் நான் குரல் எழுப்புவேன்'' என்றார்.

இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம், மாவட்ட இளைஞரணி செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் தக்கார் பாண்டி, வாசு, கார்சேரிகணேசன் நிலையூர் முருகன் மற்றும் பலர்க கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in