

சென்னை: அதிமுக செய்தித் தொடர்பாளர் திருநங்கை அப்சரா ரெட்டிக்கு 50 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீனுக்கு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
தனக்கு எதிராக அவதூறு வீடியோக்களை யூடியூபில் வெளியிட்டு களங்கம் விளைவித்ததாக கூறி, யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீன் என்பவருக்கு எதிராக அதிமுக செய்தி தொடர்பாளர் திருநங்கை அப்சரா ரெட்டி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மான நஷ்டஈடு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், யூடியூபில் கருத்துகளை வெளியிடும் உரிமை நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. மற்றவர்களின் தனிப்பட்ட உரிமையில் தலையிட முடியாது எனக் கூறி, அப்சரா ரெட்டிக்கு 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீனுக்கு உத்தரவிட்டிருந்தார்.
தனது தரப்பு விளக்கத்தைக் கேட்காமல், ஒரு தரப்பு வாதத்தை கேட்டு பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அப்சரா ரெட்டி தரப்பில், வழக்கு தொடர்ந்ததும், நோட்டீஸ் அனுப்பப்பட்டதும் ஜோ மைக்கேல் பிரவீனுக்கு தெரியும் எனக் கூறி, அத்ற்கான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில், 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய மறுத்து ஜோ மைக்கேல் பிரவீனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.