Published : 05 Apr 2024 11:06 AM
Last Updated : 05 Apr 2024 11:06 AM

“விண்ணப்பித்த அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை” - உதயநிதி வாக்குறுதி

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் முரசொலியை ஆதரித்து தஞ்சாவூர் கீழவாசல் காமராஜர் சிலை அருகே நேற்று பிரச்சாரம் செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். படம்: ஆர்.வெங்கடேஷ்.

கரூர் / திருச்சி / தஞ்சாவூர்: கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து, கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே அமைச்சர் உதயநிதிஸ்டாலின் நேற்று பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியது: நான் ஒரே மாதிரி பேசுவதாக பழனிசாமி கூறுகிறார். மாற்றி மாற்றிப் பேசும் வழக்கம் எங்களுக்கு இல்லை. பழனிசாமி தான் ஆளுக்கு தகுந்தாற்போல பேசும் பச்சோந்தி. கரூருக்கு வந்த பழனிசாமி, படம்காண்பித்துப் பேசினார் என கேள்விப்பட்டேன். தமிழக மக்களிடம் அவர் ரீல் அறுந்து போய் பல நாட்களாகி விட்டது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பித்த 1.60 கோடி பேரில் 1.16 கோடி பேருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

சிலருக்கு கிடைக்கவில்லை என்ற குறை உள்ளது. இன்னும் 6, 7 மாதங்களில் விண்ணப்பித்த தகுதி வாய்ந்த 1.6 கோடி பேருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும். தேர்தல் என்பதால் பிரதமர் மோடி தமிழகத்துக்கு அடிக்கடி வருகிறார். அவர் இங்கு வந்து வீடு எடுத்து தங்கினாலும் ஒரு தொகுதியில் கூட பாஜக டெபாசிட் வாங்காது. பாஜக ஆட்சியை பார்சல் பண்ணி அனுப்ப வேண்டிய நேரம் வந்து விட்டது. முதல்வருக்கு தூக்கம் போய்விட்டது என்கிறார் பிரதமர் மோடி.

ஆமாம், ஜூன் 4-ம் தேதி உங்களை ஆட்சியை விட்டு ஓடவிட்டு, உங்களை நிம்மதியாக தூங்க வைத்தப் பின்பே தூங்குவோம். செந்தில் பாலாஜி மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளனர். 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜோதிமணி வெற்றி பெற்றதும், செந்தில் பாலாஜி தலைமையில் இங்கு விழா நடைபெறும். தமிழக உரிமைகளை மீட்க காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள் என்றார். அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து, மணப்பாறை பெரியார் சிலை அருகே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது: கரூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை வெற்றி பெற வைத்தால், வையம்பட்டியில் அரசு ஐடிஐ அமைக்கப்படும். மணப் பாறை அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்கான புதிய கட்டிடம் கட்டப்படும். காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தில் பொன்னணியாறு, கண்ணூத்து அணைகள் இணைக்கப்படும் என்றார்.

பின்னர், திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து திருவானைக்காவல், காட்டூர் ஆகிய இடங்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது: திருச்சி தொகுதியில் வேட்பாளர் துரை வைகோவை வெற்றி பெறச் செய்தால், பொன்மலையில் அரசுமருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். குமரேசபுரம், மேலகல்கண்டார்கோட்டை பகுதியில் சுரங்கப்பாதை அமைத்து தரப்படும். திருவெறும்பூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும். பால்பண்ணை முதல் துவாக்குடி வரை உயர் மேம்பாலம் மற்றும் அணுகு சாலைஅமைக்கப்படும். பெல் நிறுவனத்துக்கு போதுமான ஆர்டர்கள் பெற்றுதந்து மேம்படுத்தப்படும் என்றார்.

ஏமாற்றிவிடாதீர்: தஞ்சாவூர் தொகுதி திமுக வேட்பாளர் ச.முரசொலியை ஆதரித்து ஒரத்தநாட்டில் நேற்று இரவு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரத்தநாட்டில் ஏமாற்றி விட்டீர்கள். இந்தமுறை ஏமாற்றி விடாதீர்கள். கடந்த மக்களவைத் தேர்தலை விட இந்த முறை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். கடந்த முறை ‘கோ பேக் மோடி’ என்றோம். இந்த முறை ‘கெட் அவுட் மோடி’ என செய்ய வேண்டும். நீங்கள் போடும் ஓட்டுதான் மோடிக்கு வைக்கும் வேட்டு.

திமுக ஆட்சியில் தான் வேளாண்மை துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 2 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப் பட்டன. இப்படி பல திட்டங்களை விவசாயிகளுக்கு முதல்வர் செய்துள்ளார். எனவே நீங்கள் எல்லாம் அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார். பின்னர் தஞ்சாவூர் கீழவாசலில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x