பெற்றோர் புகார் தராத நிலையில் சிறார் நீதிச்சட்டம் பொருந்துமா? - கோவை ரோடு ஷோ வழக்கில் நீதிமன்றம் கேள்வி

பெற்றோர் புகார் தராத நிலையில் சிறார் நீதிச்சட்டம் பொருந்துமா? - கோவை ரோடு ஷோ வழக்கில் நீதிமன்றம் கேள்வி
Updated on
1 min read

சென்னை: கோவையில் கடந்த மார்ச் 18-ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்ற ரோடு ஷோ நிகழ்ச்சியில், அரசு உதவி பெறும் தனியார் பள்ளி நிர்வாகம், தங்களது பள்ளி மாணவர்களை சீருடையில் அழைத்து சென்றதாகக் கூறி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி, சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் பள்ளி நிர்வாகம் மீது சிறார் நீதிச்சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அப்பள்ளியின் தலைமையாசிரியை புகழ் வடிவு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமையாசிரியை சார்பில், ‘‘பிரதமர் பங்கேற்கும் நிகழ்வுகாரணமாக தங்களது குழந்தைகளை முன்கூட்டியே அழைத்துச் செல்லும்படி பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பெற்றோரால் அழைத்து செல்லப்படாத குழந்தைகள் அந்த பேரணிக்கு சென்றுள்ளனர். இதற்கு பள்ளி நிர்வாகம் எப்படி பொறுப்பேற்க முடியும்?’’ என வாதிடப்பட்டது.

அதற்கு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன், ‘‘இதுதொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிவிசாரணை நடத்திய பிறகே போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. பிரதமர் பங்கேற்ற ரோடு ஷோ நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுடன் தலைமை ஆசிரியை உள்ளிட்ட 3 ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர். பிரதமர் பங்கேற்றது அரசு நிகழ்ச்சியாக இருந்தால் அதில் பள்ளிக்குழந்தைகள் பங்கேற்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அரசியல் நிகழ்வில் பள்ளிக்குழந்தைகள் பங்கேற்றது தவறு. அந்த கூட்டத்தில் பள்ளி குழந்தைகள் நீண்டநேரம் நெரிசலில் நிற்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த குழந்தைகள் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்’’ என வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி,‘‘பிரதமர் பங்கேற்ற ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு பள்ளிக்குழந்தைகளை அழைத்துச் சென்றதாக பெற்றோர் யாரும் புகார் அளிக்காதபோது சிறார் நீதிச்சட்டம் எப்படி பொருந்தும்?’’ என கேள்வி எழுப்பிய நீதிபதி, இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் விளக்கமளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்.8-க்கு தள்ளிவைத்துள்ளார்.

அப்போது பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டிக்க வேண்டுமென பள்ளி நிர்வாகம் தரப்பில் கோரப்பட்டது. அதையேற்ற நீதிபதி, இந்த வழக்கில் மறுஉத்தரவு பிறப்பிக்கும்வரை எந்தவொரு நடவடிக்கையும் பள்ளி நிர்வாகம் மீது எடுக்கக் கூடாது என தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in