Published : 05 Apr 2024 06:14 AM
Last Updated : 05 Apr 2024 06:14 AM
மதுரை: நியோ மேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்த மூத்த குடிமக்களில் 10 பேர் மனமுடைந்து உயிரிழந்துள்ள நிலையில், இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டுமென வலியுறுத்தி உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட நியோ மேக்ஸ் நிதி நிறுவனம், தமிழகம் முழுவதும் பல ஆயிரம் பேரிடம் ரூ.5,000 கோடிக்கு மேல் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டது. இது தொடர்பாக மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், நியோ மேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்த மூத்த குடிமக்கள் சார்பில், உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது: எங்கள் சங்கத்தில் 1,926 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 1,857 பேர் 60 வயது முதல் 80 வயதுக்கு உட்பட்டவர்கள். எங்கள்சங்க உறுப்பினர்கள் ஓய்வூதியப் பலன்கள் மற்றும் சேமிப்பு பணத்தை நியோ மேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.
எங்கள் சங்க உறுப்பினர்கள் ஆயிரம் பேர் மட்டும் மொத்தம் ரூ.1,500 முதல் ரூ.2,000 கோடி வரை நியோ மேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். இந்நிலையில், நியோ மேக்ஸ் நிறுவனம் மோசடி செய்தது குறித்து பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
மோசடியால் பாதிக்கப்பட்ட மூத்த குடிமக்களில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வழக்கில் விசாரணையை முடித்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம் நேரிடுவதால், எங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.
எனவே, நியோ மேக்ஸ் மோசடி வழக்கு தொடர்பாக விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, முன்னுரிமை அடிப்படையில் மூத்தகுடிமக்களுக்கு பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு போலீஸார் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிபி.புகழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த மனு தொடர்பாக பொருளாதாரக் குற்றப் பிரிவுடிஎஸ்பி பதில் அளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT