

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் அதிமுக முன்னாள்எம்எல்ஏ உறவினர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
திருப்பத்தூர் திருநாத முதலியார் தெருவில் வசித்து வரும் நவீன்குமார் (40), ரியல் எஸ்டேட், நிதி நிறுவனம் நடத்தி வருவதுடன், திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம் அருகே ‘போட்டோ ஸ்டூடியோ’நடத்தி வருகிறார். இவர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.ஜி.ரமேஷ் உறவினர் ஆவார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய இவரது வீட்டில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவருமான வரித் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வருமான வரித் துறை கூடுதல் ஆணையர் விஷ்ணு சங்கர் தலைமையிலான அலுவலர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு நவீன்குமார் வீட்டுக்கு வந்தனர். அங்கு விடிய, விடிய சோதனை நடத்தப்பட்டது. நேற்றுபகலிலும் சோதனை நீடித்தது. இதில், முக்கிய ஆவணங்கள் மற்றும் ரூ.40 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
திருப்பத்தூரில் மேலும் சிலரது வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
முன்னாள் எம்எல்ஏ விளக்கம்: இது தொடர்பாக திருப்பத்தூர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.ஜி.ரமேஷ் கூறும்போது, “எனது உறவினர் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனைநடத்தி, ரூ.40 லட்சம் பறிமுதல் செய்துள்ளனர். அந்தப் பணம்என்னுடையது என கூறப்படுவது தவறானது. அது என்னுடையது அல்ல. எனது உறவினர், தனதுமருத்துவச் செலவுக்காக வைத்திருந்தது” என்றார்.