

கோவை: கோவை மாவட்டத்தில் பறக்கும் படை சோதனையில் இதுவரை ரூ.7.66 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில், மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.இதில் உரிய ஆவணங்களின்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச் செல்லப்படும் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல ரூ.10 லட்சத்துக்கு மேல் பறிமுதல் செய்யப்படும் ரொக்கப் பணம் குறித்து வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறும்போது, “மக்களவை தேர்தலை முன்னிட்டு 257 வழக்குகளில் இதுவரை ரூ.7.66 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.2.16 கோடி பணம் விடுவிக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.5.50 கோடி பணம் விசாரணை நிலுவையில் உள்ளது. இத்துடன் ரூ.3.67 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைரங்கள், மதுபாட்டில்கள், இதர பொருட்கள் என மொத்தம் ரூ.3.70 கோடிக்கு பறிமுதல் செய்யப் பட்டுள்ளது” என்றனர்.