

தருமபுரி: வன்னியர் சமூகத்துக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை பாமக கண்டிப்பாக பெற்றே தீரும் என தருமபுரியில் நேற்று முன்தினம் இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் மருத்துவர் ராமதாஸ் பேசினார்.
தருமபுரி மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணிக்கு ஆதரவு திரட்டும் வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தருமபுரி வள்ளலார் திடலில் நேற்று முன் தினம் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ், நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஆகியோர் பங்கேற்று பேசினர். அன்புமணி ராமதாஸ் பேசும்போது, வன்னியர் இன மக்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை முந்தைய அதிமுக ஆட்சி அரைகுறையாக கொடுத்தது.
கருணாநிதி காலத்து திமுக-வில் சமூக நீதி இருந்தது. இன்று சமூக நீதி பேச அந்தக் கட்சிக்கு அருகதை இல்லை. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாட்டோம் என பாஜக எப்போது கூறியது? 50 ஆண்டுகளுக்கும் மேலாக மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் இது தொடர்பாக ஏதாவது வாக்குறுதி அளித்திருக்கிறதா? முன்னேற்றம் ஒன்று தான் பாமக-வின் நோக்கம். எனவே, தருமபுரி மக்களவைத் தொகுதி முன்னேற்றம் காண பாமக-வுக்கு வாக்களியுங்கள், என்றார்.
தொடர்ந்து, மருத்துவர் ராமதாஸ் பேசியது: பாமக பல ஆண்டுகள் போராடி மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தது. இதன் மூலம் இச்சமூகத்தினர் கல்வி, வேலை வாய்ப்புகளில் முன்னேறி வருகின்றனர். அரசு போட்டித் தேர்வுகளிலும், குடிமைப் பணி தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று பல்வேறு பதவிகளையும் பெற்று வருகின்றனர். இந்த நிலையை எட்ட பாமக செய்த தியாகங்கள் ஏராளம். அதே போல, வன்னியர் சமூக மக்களுக்கு சிறப்பு உள் ஒதுக்கீடாக 10.5 சதவீதம் வழங்கக் கோரி பாமக தொடர்ந்து போராடி வருகிறது.
இந்த இட ஒதுக்கீடு வழங்குவதில் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு மனமில்லை. இருப்பினும், வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை கண்டிப்பாக பாமக பெற்றே தீரும். தேசிய ஜனநாயகக் கூட்டணி, நடைபெறவுள்ள மக்களவை பொதுத் தேர்தலில் இந்தியா முழுவதும் 401 தொகுதிகளில் வெற்றி பெறும். நேரு, இந்திராவுக்கு பிறகு மூன்றாம் முறையாக பிரதமர் ஆக இருப்பவர் மோடி. தருமபுரி மக்களவைத் தொகுதி வாக்காளர்கள் பாமக வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.
கூட்டத்தில், பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏ, தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் வெங்கடேஸ்வரன் எம்எல்ஏ, பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கர், அமமுக மாவட்ட செயலாளர் டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.